உண்னைச் சரணடைந்தேன் – கம்பவாரிதியின் அனுபவ ஆவணம்

– சந்திரமௌலீசன் லலீசன்

“உன்னைச் சரணடைந்தேன்” என்ற பெயரில் கம்பவாரிதியின் அனுபவப்; பதிவு நூல் வெளிவந்துள்ளது. 1980 ஆம் ஆண்டு தொடக்கம் 1995 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அகில இலங்கைக் கம்பன் கழகச் செயற்பாடுகளை முன்னெடுத்த போது ஏற்பட்ட

அனுபவங்களைத் திரட்டித் தருவதாக – ஒரு தளப் பார்வையாக நூல் அமைந்துள்ளது.

‘என் விருப்புப் பற்றி யாரையும் உயர்த்தியோ
என் வெறுப்புப் பற்றி யாரையும் தாழ்த்தியோ எழுதாமல்
முடிந்தவரை நடுவு நிலைமையோடு நடந்தவற்றைப் பதிவு செய்கின்றேன்’
என வாரிதியார் தனது முகவுரையில் குறிப்பிடுகின்றார்.

தன்னோடு முரண்பட்டவர்களை, நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களை, பொய்ம்மை வாதிகளை ஒரு ‘பிடி’ பிடித்திருக்கின்றார்.

கம்பவாரிதியின் சுவைஞனாக நான் ஈர்ப்புப் பெற்றது எனது கல்லூரிக் காலத்தில்தான். 1984 ஆம் ஆண்டென நினைக்கின்றேன். நான் சென்.ஜோன்ஸில் ஒன்பதாம் வகுப்பில் பயின்று கொண்டிருந்த காலம். புதன் கிழமைகளில் நிகழும் எங்கள் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்த வாரிதியார் திருவாசகம் பற்றிப் பேசியதுடன் தோடுடைய செவியன் பாடிய அடியவர் ஒருவர் உள்ளங்கவர் கள்வன் என மேலும் பாட முடியாமல் நின்றதான நகைச்சுவைக் கதையொன்றையும் சொன்னார்.

பாடசாலைப் பேச்சுப் போட்டியில் பெற்ற வெற்றியும் தொடர்ந்து கம்பன் கழகப் பேச்சுப் போட்டி தந்த வெற்றியும் என்னுள் ஏற்படுத்திய உற்சாகம் அவரது பேச்சு எங்கு நடந்தாலும் என்னைப் பின்தொடர வைத்தது. என்னையும் பேச்சு மேடை நோக்கி இழுத்து வந்தது.

சரசாலையில் இருந்து சைக்கிளில் பட்டிமண்டபம் பார்க்கச் செல்வதுவும் ஓர் ஓரத்தில் நின்று அதைப் பார்த்துவிட்டு வருவதுவுமாக என் வழக்கம் அன்று இருந்தது. அன்று சரசாலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான சைக்கிளோட்டத்தைப் பெரிய சுமையாக நான் கருதியிருக்கவில்லை. காலையில் ரியுசனுக்குப் போய் வந்து – இரவு மீண்டும் பேச்சு அல்லது பட்டிமண்டபம் பார்க்கப் போய் – மீண்டும் அடுத்த நாள் சயன்ஸ் அக்கடமிக்குப் பல நாட்கள் போயிருக்கின்றேன். குணசீலன் சேர் கேள்வி கேட்கத் திருதிருவென முழித்துத் திட்டும் வாங்கியிருக்கின்றேன்.

கம்பவாரிதியின் மீது இத்தகைய ஆர்வம் சார்ந்த பின்புலம் இருந்தமையால் 807 பக்கங்கள் கொண்ட இந்நூலை நான்கு நாட்களில் என்னால் வாசிக்க முடிந்தது.

22.05.1980 ஆம் ஆண்டில் கம்பவாரிதியும் யாழ். இந்துக் கல்லூரித் தோழர்களும் இணைந்து கமலாசனி ரீச்சரின் கெமிஸ்றி ரியுசன் வகுப்பில் ஆரம்பித்ததுதான் கம்பன் கழகம். இன்று விருட்சமாகி சேய்களைப் பயந்து உலகெங்கும் கிளை பரப்பி நிற்கின்றது.

அமரர்களான சிவராமலிங்கம் மாஸ்ரர், வித்துவான் வேலன், வித்துவான் ஆறுமுகம், பேராசிரியர் இராதாகிருஷ்ணன், இலக்கண வித்தகர் நமசிவாய தேசிகர் போன்ற பெருமக்கள் தன்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை, ஆளுமையை வாரிதியார் அழகாகப் பதிவு செய்துள்ளார்.

மாணவரது வளர்ச்சியில் அவர்கள் காட்டிய பெருந்தன்மையான செயற்பாடுகளும் ஆர்வமும் இன்றைய ஆசிரியர் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய பாடம்.

தனது பயணத்திற்கு இடையூறு செய்தவர்கள் – இடையில் கழுத்து நெருக்க முயன்றவர்கள் எனத் தான் கருதுவோர் குறித்து வெளிப்படையாகப் பெயர் குறிப்பிட்டு அவர்கள் செய்த காரியங்களையும் பதிவிட்டுள்ளார்.

தனிபட்ட நபர்களைப் பற்றிய பதிவுகளில் அவர்களது சுயம் பற்றிய பார்வையில் பங்கம் இருக்கின்றதோ என்ற எண்ணமும் என்னுள் இல்லாமல் இல்லை. இளகிய இரும்பைக் கண்டால் கொல்லன்…. தூக்கித் தூக்கி அடிப்பானாம் என்றொரு பழமொழி எம்மிடையே உண்டு. அந்த அடி பல இடங்களில் விழுந்திருக்கின்றது என்றே நினைக்கின்றேன்.

அந்த அடிகளால் அவர்கள் புதிய மனிதர்களாக உற்பவிக்கப்படுவார்களாயின் ‘அடி’ சரியானதென்றே சொல்வேன். ஆனால் இங்கு அடி வாங்கியவர்களுள் பெரும்பான்மையினர் அகவை ஐம்பதைக் கடந்தவர்கள். இதனால் ஆகப் போவது என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதே வேளை இன்று சமூகத்தில் ஏதோ ஒருவகையில் தம்மை முன்னிறுத்தித் தலை நிமிர்ந்து நிற்பவர்களுக்கு அவர்களது இளமைக் குணம் பற்றிய வாரிதியாரின் பார்வை சங்கடங்களையும் ஏற்படுத்தலாம். அவர்கள் தம்மை நிலை நிறுத்துவதற்கு இன்னும் பொய் புரட்டுக்களைத் தேடலாம்.

தவிரஇ தனி ஒருவனாக நின்று கழகத்தைக் கட்டியெழுப்பிய வாரிதியாரின் ஆளுமை, வாசகன் என்ற நிலையில் என்னைப் பிரமிக்க வைக்கின்றது.

கம்பனைச் சரணடைந்த அவருக்கு வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்களில் குரங்கு காட்சி கொடுத்து ; மனத்தை வழிப்படுத்தியுள்ளது. ‘அழியா அழகுடையானின்’ திருவருளே அவர் நிமிர்வுக்குக் காரணம் என்பது எனது அபிப்பிராயம்.

ஓர் உண்மை ஆசிரியன் எப்படி இருப்பான் என்பதை அவருக்கு வாய்த்த குருமாரின் ஊடாகத் தரிசனம் செய்ய முடிகின்றது.

2004 என நினைக்கின்றேன். யாழ். கம்பன் கோட்டத்திற்கு மாதம் ஒரு முறை வந்த வாரிதியாரிடம் நாங்கள் திருக்குறள் பயின்றோம். நான், மார்க்கண்டு சேர், பாலஷண்முகன் மற்றும் சிலர் இரவில் படித்துவிட்டு அங்கேயே படுப்போம்.

ஒரு நாள் இரவு பதினொரு மணிவரை படித்துவிட்டு நாங்கள் உடம்மை நெளித்து ‘இனிக் காணும் என’ எங்கள் இயலாமையைக் காட்டி உறக்கத்திற்குப் போய்விட்டோம். பன்னிரண்டரை மணிக்கு எங்களைத் தட்டி எழுப்பிய வாரிதியார் தனக்குச் சாத்வீக குணம் உயர்ந்திருக்கின்ற நிலையில் இன்னும் படிப்பிக்க வேண்டும் போல இருக்கின்றது. எழும்புங்கள் படிப்போம் என்றார்.

இரண்டரை மணித்தியாலங்கள் நீத்தார் பெருமை பற்றிப் பாடமுரைத்தார். பாயிரம் மற்றும் இல்லறவியலின் சில அதிகாரங்களையே படிக்கும் பாக்கியத்தையே அன்று நாம் பெற்றிருந்தோம். இப்படிக் கற்பிக்கும் குணம் அவரது குருவான வித்தகர் அவரில் ஏற்படுத்திய தாக்கம் என நூலைப் படித்தபின் என்னால் உணர முடிகின்றது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் சந்தித்த மனிதர்கள் சம்பவங்கள் பற்றிய விபரங்களை நாள், மாதம் வருடம் என அட்சரம் பிசகாது குறிப்பிடும் பாணி அவரது அபார ஞாபக சக்தியின் விளைவோ எனக் கருத வேண்டியுள்ளது.

‘உண்மைகள் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்றில்லை. ஆனால் சொல்பவை எல்லாம் உண்மைகளாக இருக்க வேண்டும்’ என எனது ஆசான் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா அடிக்கடி மேடைகளில் குறிப்பிடுவார். அதனை நானும் இக்குறிப்புரையின் நிறைவில் வழிமொழிய விழைகின்றேன்.

ஈழத்துச் சொற்பொழிவுலகில் பேச்சாளனாகத் தலை நிமிர்ந்து ஏனைய பேச்சாளர்களுக்கும் ஓர் நிமிர்வைப் பெற்றுக் கொடுத்தவர் கம்பவாரிதியே எனத் துணிந்து சொல்வேன்;. அந்த நிமிர்வை நோக்கிய எமது ஈர்ப்புக்கு இந்நூல் உரமாக வழிகாட்டும் என நம்புகின்றேன்.

இந்நூலின் இரண்டாவது பகுதியையும் வெளியிட ஆர்வம் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதில் பிரதானமாக 1995இன் பின் உள்ள அனுபவங்கள் வெளிவரவுள்ளன. அதனை வெளியிடக்கூடிய பலத்தை இறைவன் அவருக்கு நல்குவாராக.

*

*

Top