இறந்தால் தியாகி இருந்தால் துரோகி! – தமிழினி

– இமையம், எழுத்தாளர்,

ஒரு கூர்வாளின் நிழலில் தமிழினியால் எழுதப்பட்ட தன் வரலாற்றுக் கதை. தமிழினியின் வாழ்க்கை வரலாறு என்பதை விட 18 ஆண்டு கால விடுதலைப் புலிகளின் இயக்க வரலாறு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். தமிழினி தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே மிகுந்த ஈடுபாட்டுடன் இயக்கத்தில் சேர்கிறார். முள்ளிவாய்க்கால் போர் முடிந்த அன்று அவருடைய போராளி வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

இந்த வாழ்வில் அவர் செய்த காரியங்கள், கண்டது, கேட்டது, கற்றது, அனுபவித்தது, பேசியது, சக போராளிகளுடனான அனுபவம், தலைமையின் கட்டளையை ஏற்றுச் செயல்பட்டது என்று ஒவ்வொரு விஷயத்தையும் துல்லியமாகச் சொல்கிறார். போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், இயக்கத்தின் தலைமையால் தகவலின்றிக் கைவிடப்பட்ட நிலையில் ராணுவத்திடம் சரண் அடைந்தது, ராணுவ விசாரிப்புகள், சிறை வாழ்க்கை, புனர்வாழ்வு மையத்தில் இருந்தது, இறுதியாகத் தன் தாயாரிடம் கையளிக்கப்பட்டதுவரை எல்லாவற்றையும் சொல்கிறார்.

அமைதிப்படையின் அத்துமீறல்

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கவரப்பட்டது, வீட்டுக்குத் தெரியாமல் இயக்கத்தில் சேர்ந்தது, பள்ளிக்குச் செல்லும் வழியில் இந்திய அமைதிப் படையினரால் அவமானப்படுத்தப்பட்டது என்பதையெல்லாம் வரிசைக் கிரமமாகச் சொல்கிறார். அமைதி ஒப்பந்தத்தை இரண்டு தரப்பினரும் படிப்படியாக மீறிச் செயல்பட்டதை விளக்குகிறார். இலங்கை அரசு, புலிகள் ஆகிய இரு தரப்பும் வெறுக்கக்கூடிய நிலையை இந்திய அமைதிப்படை ஏன் ஏற்படுத்திக்கொண்டது என்பதை வெறும் தகவலாகச் சொல்லாமல் அதற்கான சூழலையும் சேர்த்தே சொல்கிறார்.

விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் முன் துப்பாக்கி ஏந்திச் செல்லக்கூடிய அதிகாரம் பெற்ற மாத்தையா மீது, தலைமைக்கு எதிராகச் செயல்பட்டார் என்று எப்படிப் பழி சுமத்தப்பட்டது? அதன் பிறகு மாத்தையா என்ன ஆனார், சந்தேகத்திற்கிடமான பலர்மீதும் ஒரே குற்றச்சாட்டு திரும்பத் திரும்ப எப்படிச் சுமத்தப்பட்டது, எதனால் சுமத்தப்பட்டது என்பதற்கான காரணங்களைத் தமிழினி சொல்கிறார். மாத்தையா விஷயத்தில், கருணா விஷயத்தில் மற்ற போராளிகள் என்னென்ன சொன்னார்கள் என்பதையும் எழுதியிருக்கிறார். பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனியின் தலைமையில் இயங்கிய ‘கணினிப் பிரிவு’ கட்டாய ஆள் சேர்ப்புப் பணியில் ஈடுபட்டது, அவருடைய அதிரடியான முடிவுகளால் போராளிகளுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு ஆகியவற்றையும் எழுதியிருக்கிறார்.

ராஜபக்சவுக்கு ஓட்டு!

மகிந்த ராஜபக்ச வந்தால் போர் ஒரு முடிவுக்கு வரும்; அதனால் அவர் ஜெயிக்க வேண்டும்; அதனால் அவருக்கு ஓட்டுப்போட்டு ஆதரியுங்கள் என்று தமிழ் மக்களிடத்தில் அறிவிக்கச் சொன்னதே பிரபாகரன்தான். அப்போது அந்த முடிவை அவர் எடுக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? தெரியாது. பிரபாகரன் எடுத்த முடிவுகளில் எத்தனை சரியானது, எத்தனை பிழையானது? முள்ளிவாய்க்காலில் போரின்போது உயிர் பிழைப்பதற்கு வழியின்றி, புலிகளின் கட்டுப்பாட்டை மீறி சரணடையச் சென்ற மக்களின் கால்களுக்குக் கீழே சுட்டுத் தடுத்து நிறுத்தச் சொன்னது யார் என்பதையெல்லாம் தமிழினி விவரிக்கிறார்.

மாபெரும் சக்தியிலிருந்து சீரழிவு நோக்கி…

இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பெரிய அதிர்ச்சிகள் வாசகர்களுக்குக் காத்திருக்கின்றன. இயக்கத்தை நம்பி, நாட்டுக்காக என்று போனவர்களை எப்படி, ஏன் இயக்கமே சுட்டுக் கொன்றது? சிறுசிறு தவறுகளையும், சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்த சிறுசிறு பிழைகளையும் மன்னிக்கத் தெரியாத, மன்னிப்பதற்குப் பெருந்தன்மையற்ற, இறுக்கம் நிறைந்ததாகத் தலைமை இருந்தது ஏன்? வஞ்சகப் பொறியினுள் மாட்டியவர்கள், மாட்டி விடப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், மக்கள் மத்தியில் ஏற்பட்ட வெறுப்பு, குடும்ப வறுமையாலும், சூழலாலும் இயக்கத்திலிருந்து பலர் வெளியேறியது, படிப்படியாக இயக்கத்தில் ஆளணி குறைந்துகொண்டேவந்தது, சிறுவர் சிறுமியர்களைக் கட்டாயப்படுத்தி இயக்கத்தில் சேர்க்க நேர்ந்ததின் விளைவு என எல்லாவற்றையும் சொல்கிறார்.

மாபெரும் சக்தியாக, எழுச்சியாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் எப்படிப் படிப்படியாகச் சீரழிந்தது, சீரழிவுக்குத் தள்ளப்பட்டது என்ற வரலாற்றை, உண்மைகளைப் பேசுகிறது இந்த நூல்.

இறந்தால் தியாகி, இருந்தால் துரோகி!

போராளிகளுக்கிடையே இருந்த சாதிய மனோபாவம், மதம் சார்ந்த மூடநம்பிக்கைகள் எப்படி இருந்தன என்பதைச் சொல்கிற தமிழினி தன்னுடைய வீட்டில் சாதி சார்ந்த பார்வை என்னவாக இருந்தது என்பதையும் சொல்கிறார். யுத்தத்தில் இறந்துபோகாமல் உயிருடன் திரும்பிவந்த ஒரே காரணத்துக்காகத் தான் சந்திக்க நேர்ந்த அவமானங்கள் எவ்வளவு என்பதையும் சொல்கிறார். உயிரோடு இல்லாததால் ஒருவர் தியாகியாகிறார். உயிரோடு திரும்பி வந்ததால் ஒருவர் துரோகியாகச் சித்தரிக்கப்படுகிறார்.

மனிதர்கள் செய்த தியாகங்கள், அர்ப்பணிப்புகளைத் தமிழினி எழுதுகிறார். கண்ணீரின்றி யாருடைய கதையையும் படிக்க முடியாது. முப்பதாண்டுகளுக்கு மேலாக லட்சக் கணக்கானோர் செய்த அர்ப்பணிப்பும் தியாகமும் கடைசியில் கடலில் கரைக்கப்பட்ட உப்பாக எப்படி மாறிப் போனது என்று தமிழினி கேட்கிறார். சொல்லித் தீராத, எழுதி மாளாத, அழுது தீர்க்க முடியாத துயரப் பெருங்கடலின் சிறு துளிதான் இந்த நூல்.

எந்த நம்பிக்கையில்?

பிரபாகரன் பெண் புலிகளை மரியாதையாகவும் கவுரவமாகவும் ஒரு தந்தையின் ஸ்தானத்திலிருந்து அன்பாகவுமே நடத்தினார். இயக்கம் ‘சீதனத்தை’ தடைசெய்தது, போராளிகளுக்கிடையே திருமணத்தை நடத்தி வைத்தது, குழந்தைகளை விரைவாகப் பெற்றுக்கொள்ளும்படி வைத்தது.

உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்க, போராளிகள் உலகத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாமல், மாற்று உடை இல்லாமல், அடுத்த வேளை உணவில்லாமல், அடர்ந்த காட்டினிடையே குடும்பத்தோடு, உறவோடு சிறு தொடர்பும் அற்று எந்த நம்பிக்கையில் போராடினார்கள்? அவர்களுடைய போராட்டத்துக்கு, தியாகத்துக்கு, நம்பிக்கைக்குக் கிடைத்த பரிசு என்ன? முப்பதாண்டுகளுக்கு மேலாக பலி கொடுத்து வளர்த்தெடுத்த மாபெரும் கனவு எப்படிக் கருகித் தீய்ந்துபோயிற்று என்பதையெல்லாம் கண்ணீரின் வழியே தமிழினி சொல்கிறார்.

இந்த நூல் வெளியாவதற்கு முன்பே தமிழினி புற்றுநோயால் இறந்துவிட்டார். ஆனால், அவருடைய எழுத்துக்கு மரணமிலாப் பெருவாழ்வு!

*

*

Top