மழை பொழிய வேண்டும் இல்லையென்றால்

– வேலணையூர் தாஸ்

உருகி வழிகிறது சூரியக்கோளம்
தீயேந்தி வருகிறது வெப்பக்கதிர்
ஈரம் உலர்ந்து வறண்டு சுருள்கிறது பூமி
நெடுவீதி தன்னில்
நிழல் தேடித் தவிக்கிறது
தனித்த நாய்.

கோடையின் கொடும் பாடலை
வறண்ட குரலால் பாடி வெறுப்பேற்றுகிறது
ஒற்றைக்காகம்.

சில நாள் வாழ்வும் இன்றி
கருகிசாகிறது கரையோரப்புல்.

வெப்பமே ஆடையாகிற்று
வியர்வையில் குளிக்கிறது மேனி
காற்றிலும் பரவி வருகிறது வெப்பம்
தார் உருகி ஓடும் வீதியில்
செருப்பின்றி தகிக்கிறது ஏழையின் பாதம்.

கோடை நெருப்பள்ளி
கொட்டுகிற இந்நேரம்
மேகங்கள் திரண்டு மின்னல் வெட்டி
மழை சோவென்று பொழிய வேண்டும்
இல்லையென்றால் நீ வரவேண்டும்…

Related posts

*

*

Top