முற்போக்குக் கவிஞர் சுபத்திரன்

Barack Obama

இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில், தன்னை முற்போக்கு இலக்கிய கவிஞராக அடையாளப்படுத்திக் கொண்ட கவிஞர் இவர்.

தங்கவடிவேல் என்னும் இயற்பெயரைக் கொண்டவர். தகப்பனார் பெயர் கந்தையா, தாயார் தெய்வானைப்பிள்ளை. ஏப்ரல் 16, 1935ஆம் ஆண்டு மட்டக்களப்பில் பிறந்தார். ஆரம்பக்கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கற்றுப் பின்னர் பயிற்றப்பட்ட ஆசிரியரானார். ஆரம்பத்தில் கொழும்பிலும் பின்னர் மட்டக்களப்பிலும் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கினார்.

சுபத்திரனுடைய இலக்கிய ஆளுமை அவரை மட்டக்களப்பின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக ஆக்கியது. சாதி, ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து அதன் போராட்டங்களில் தானும் ஒரு பங்காளியாக நின்று உழைத்தார். தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்து நின்று கவிதைகளைப் படைத்தார்.

‘இரத்தக்கடன்’ (சாதியத்திற்கு எதிரான கவிதைத் தொகுப்பு), ‘சுபத்திரன் கவிதைகள்’, அதைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு ‘கவிஞர் சுபத்திரன் கவிதைகள்’ வெளிவந்தன.

ஒடுக்குமுறைக்கெதிராக – ஆத்திரம், கோபம், கிண்டல் என்பவற்றை முன்னிறுத்திக் கவிதைகளை படைத்தார். வெகுஜனப் போராட்டங்களில் உத்வேகத்துடன் ஈடுபட்டார். மார்க்சிய எண்ணம் கொண்ட சுபத்திரன் ஆயுதப் புரட்சியை ஆதரித்தார்.

மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்று வெகுஜனப் போராட்டங்கள், தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு அவற்றின் தாக்கத்தால் பல கவிதைகளை எழுதினார். 1969 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு வெகுஜன மகாநாட்டில்’ வைத்து முழுக்க முழுக்க சாதிய எதிர்ப்புக் கவிதைகள் அடங்கிய சுபத்திரனின் ‘இரத்தக் கடன்’ என்னும் கவிதைத்தொகுதி வெளியிட்டு வைக்கப்பட்டது.

சொல்லிலும் செயலிலும், பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்து காட்டினார். தான் இணைந்திருந்த கொம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள போலி இடதுசாரிகளுக்கு எதிராக, அவருடைய அரசியல் கவிதைகள் 1970 களில் வெளிவருவதைக் காணலாம். சுபத்திரன் 1979இல் அகால மரணமாகும் வரை கவிதைகளை எழுதினார்.
கொம்யூனிஸ்டாகவே இறக்கும் வரை, பற்றுறுதியுடன் இருந்தார்.

*

*

Top