பேரறிஞர் அப்துல் அஸீஸ்

Barack Obama

- சி.ரமேஸ்

இஸ்லாமிய சிந்தனையையும் முஸ்லிம் உலகையும் நவீன சிந்தனைக்கும் புதிய யுகத்திற்கும் புதிய கல்விக்கும் தயார்படுத்த முயன்ற இந்தியாவின் சேர்.செய்யத் அகமத் கான் (1817-1989), ஈரானில் ஜமாலுத்தீன் அல் – ஆப்கானி (1839-1897), எகிப்தில் ஷெய்க் முஹம்மத் அப்தூ (1949-1905), ரiத்றிதா (1965-1935) போன்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவருள் முக்கியமானவர் அஸீஸ் ஆவார். மறுமலர்ச்சித் தந்தை எனப்படும் சித்திலெப்பை பத்தொன்பதாம் சூற்றாண்டில் தமது ‘முஸ்லிம் நேசன்’ பத்திரிகை மூலம் இச்சிந்தனைகளை இலங்கை முஸ்லிம்களின் மனதில் விதைத்தார். ஒராபி பாஷாவுடன் சேர்ந்து நவீன கல்விக்காக சித்திலெப்பை முன்னெடுத்த போராட்டங்கள் முஸ்லிம்களின் சிந்தனைகளில் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணியது. சித்திலெப்பை, ஒராபி பாஷாவின் வரலாற்றுப் பணிகளைத் தேடி எடுத்து அதன் வழியில் தன் பணிகளைத் தொடர்ந்தார்.

19ஆம் நூற்றாண்டில் எழுச்சிபெற்ற முஸ்லிம் நவீனத்துவ சிந்தனையை உள்வாங்கிய அஸீஸ் முஸ்லிம் மக்களிடையே சமூக சமத்துவத்தை உருவாக்குவதிலும் முன்னின்று உழைத்தார். இலங்கை முஸ்லிம்களின் கல்வி, சிந்தனை, கலாசார மறுமலர்ச்சி, சமூக மாற்றம் தொடர்பில் அஸீஸின் பணியை அறிவது முக்கியமாகும். கல்வியின் ஊடாக கலை, இலக்கியம் உட்பட்ட விரிவான கலாசார மறு மலர்ச்சிக்கு வித்திட்ட அஸீஸ் கல்வி, அறிவு, முஸ்லிங்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் ‘எதிர்கால வாழ்வுக்கும் எதிரான பழைமை வாதத்தை எதிர்த்தார்.1973 ஆம்ஆண்டு நவம்பர் 24ஆம் திகதி அவர் இறக்கும் வரை கல்விக்காகவும் பொது நலசேவைக்காகவும் முஸ்லிம், தமிழ் சமூக மாற்றத்திற்காகவும் உழைத்தார்.

பிறப்பு
1911 ஓக்டோபர் மாதம் 04ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம், வண்ணார் பண்ணை எனும் ஊரில் பிறந்தார்.

பெற்றோர்கள்
தந்தை சுலைமான் முகைதீன் முஹம்மத் அபூபக்கர், இவர் அசனாலெப்பைப் புலவரின் சகோதரர். சட்டத்தரணியும் காதியாரும் ஆவார்.யாழ்ப்பாணத்தின் நகரசபை உறுப்பினராகக் கடமையாற்றியதுடன்1941 இல் நகரசபை உபதலைவர் பதவியையும் அலங்கரித்தவர்.1946.ல் அகில இலங்கை லீக் தலைவராகவும் இவர் கடமையாற்றியவர்.

தாய் முஹம்மத் மீராமுஹைதீன் நாச்சியா. இவர் அஸீஸின் ஏழாவது வயதில் காலமானார். இவருடைய சகோதரர் தாஹா இளவயதிலேயே காலமானார். வருடைய தந்தையார் ஆயிஷாவை மணம் முடிக்க அஸீஸ் தாயின் தங்தையான முகமது சுல்தான் அப்துல் காதரின் வீட்டில் வளர்ந்தார்.

ஆரம்பக் கல்வி மற்றும் கல்வித்தகைமைகள்
தனது ஆரம்பக் கல்வியை 3ஆம் தரம் வரை யாழ்.அல்லாபிச்சை பள்ளி எனப்படும் அரசினர் முஸ்லிம் பாடசாலையிலும் பின் 1921இல் இராமகிருஷ்ணமிஷன் வைத்தீஸ்வர வித்தியாலயத்திலும் தொடர்ந்தார். அங்கு வரவுப் பதிவேட்டில் 195வது மாணவனாக இவர் பெயர் பதியப்பட்டது. அக்கல்லூரியில் இரண்டாவது முஸ்லீம் மாணவர் இவராவார். இக்காலப் பகுதியில் இஸ்லாம் சமயத்தைப் போதிக்க வைத்தீஸ்வரா பாடசாலையில் மௌலவிகளும் நியமிக்கப்பட்டனர்.

பின் 1923 ஆம் ஆண்டு யாழ்.இந்துக் கல்லூரியில் 6ஆம் தரத்தில் இணைந்தார்.இலத்தீன் மொழியையும் விஞ்ஞானத்தையும் பயில்வதற்கும் கேம்பிரிட்ஜ் பரீட்சைக்கு தேற்றவுமே இந்துகல்லூரியை அவர் தேர்வு செய்தார். இந்துக்கல்லுரியின் முதல் முஸ்லிம் மாணவரும் இவரே ஆவார். பதினொராவது வயதில் இரட்டிப்பு வகுப்பேற்றத்தை பெற்றார். 1929 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடத்தை தெரிவு செய்து 1933இல் கௌரவப்பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1933இல் கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழகத்தின் புனித கதரின் கல்லூரியில் வரலாற்றுத்துறையில் கலாநிதிப் பட்ட ஆய்வில் தம்மை ஈடுபடுத்திய சமயத்தில் அவர் சிவில் சேவையாளர் பரீட்சையில் சித்தி பெற்றார். இலங்கை சிவில் சேவையாளர் பிரிவில் சேர்ந்து கொண்ட முதல் முஸ்லிமும் இவராவார்.

திருமண வாழ்க்கை
அஸீஸ் திருமண பந்தத்தின் மூலம் கொழும்பில் தனது வாழ்வை ஆரம்பித்தார். கொழும்பில் பாரஸீகக் கொன்சலராகக் கடமையாற்றிய எம்.ஐ.முஹம்மத் அலியின் பேத்தியும், இலங்கை சட்ட நிரூபண சபையின் முதலாவது முஸ்லிம் அங்கத்தவரான எம்.சி.அப்துல் றகுமானின் பூட்டியுமான உம்மு குல்தூம் என்பவரை 1937இல் அஸீஸ் திருமணம் செய்தார்.

சேவைகளும் சமூக பங்களிப்புகளும்
1940ஆம் ஆண்டு கௌரவமிக்க இலங்கை சிவில் சேவையில் முதல் முஸ்லிம் அதிகாரியாக பதவிவகித்தார். 1942 ஏப்ரல் 16ஆம் திகதி முதல் கல்முனையிலும் பின்னர் கண்டியிலும் உதவி அரசாங்க அதிபராக பணியாற்றினார். கல்முனையில் குறுகிய காலமே அங்கு வாழ்ந்தாலும் அவரது அரசாங்கக் கடமைகளோடு, பொதுநல ஈடுபாடு, மக்கள் சேவை, வரலாற்று ஆய்வுகளுக்கான தகவல்களைச் சேகரித்தல் போன்ற பல பணி களை அவர் முன்னெடுத்தார். சுவாமி விபுலானந்தருடன் நெருக்கமான உறவுகளை கல்முனையில் பணியாற்றும் காலத்தில் அஸீஸ் ஏற்படுத்திக் கொண்டார். அதேபோன்று 1930களில் புதிய சிந்தனைகளையும், இஸ்லாமிய மற்றும் கல்வி எழுச்சிகளையும் பற்றிப் பாடிவந்த மூத்த முஸ்லிம் கவிஞரான காத்தான் குடி அப்துல் காதர் லெப்பையின் தொடர்பும் கல்முனைக் காலத்திலேயே ஆரம்பமாகியது.முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரானஎம்.எச்.எம்.அஸ்ரப்பின் தந்தையார் அப்துல்மஜீத்துடனும் பொத்துவில் பாரளுமன்ற அங்கத்தவரான எம்.எம். இப்றாஹீமுடனும் நட்புறவைப் பேணி வந்தார்.இக்காலப்பகுதியில் முஸ்லிம் மக்களின் கல்வி தொடர்பாகவும் முஸ்லிம்கல்விச் சகாயநிதி தொடர்பாகவும் இவர் மேற் கொண்ட முயற்சிகள் பாரட்டத்தகுந்தன.

1943இல் அஸீஸ் மாற்றலாகி கண்டியில் தனது பணிகளை ஆரம்பித்தார். கண்டியில் தனது அரசபணிகளுக்கு மத்தியில் பொதுப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்ட தோடு படித்த மற்றும் வர்த்தகப் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக்கொண்டார். அதன் விளைவாகக் கண்டியில் இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தை (YMMA) தாபிப்பதிலும் அவர் வெற்றி பெற்றார்.

ஸாஹிறாவில் அஸீஸ்
சேர். செய்யித் அகமத்கானால் 1875இல் இந்தியாவில் அலிகாரில் ஆரம்பிக்கப்பட்ட அலிகார் முஸ்லிம் கல்லூரி இஸ்லாமிய மரபுகளுடன் இணைத்து நவீன கல்விமுறைமையை உருவாக்கியது. முன்னோடி ஸ்தாபனமாக அமைந்த அலிகார் கல்லூரி கொழும்பில் ஸாஹிராக் கல்லூரியின் தோற்றத்தின் ஆதாரச் சிந்தனைகளுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருந்தது. 1882ஆம் ஆண்டு ஸாஹிராக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் முஸ்லிம்களுக்கான ஆங்கிலப் பாடசாலையாகவும் உயர் கலாசாலை என்ற பெயருக்குரிய தாகவும் ஸாஹிறா மட்டுமே இருந்தது. கல்வியோடு முஸ்லிம்களின் எதிர்காலமும் ஸாஹிறாவின் வளர்ச்சியில் ஒன்றிணைந்திருந்த சகாப்தமென அதை வர்ணிக்கலாம்.

ஸாஹிறாவின் பெருமைமிக்க ஒப்பற்ற தலைவராக அஸீஸ் பணியாற்றிய காலம், ஸாஹிறாவின் வரலாற்றில் பிரகாசமிக்க பொற்காலமாக அமைந்தது. ஸாஹிறாவின் முன்னேற்றத் திற்காகப் பாடுபட்ட ரி.பி.ஜாயா வின் (1890-1960) பிரியாவிடையோடு எ.எம்.எ.அஸீஸின் ஆட்சிக்காலம் ஸாஹிறாவில் ஆரம்பமாகியது. 1948 ஆகஸ்ட் மாதம் ஸாஹிறாவின் அதிபர் பொறுப்பை அஸீஸ் ஏற்றுக்கொண்டார். பிற்பட்ட காலங்களில் இவர் செனட் சபை உறுப்பினராகவும்இ தமிழ் தொண்டராகவும் மற்றும் நூலாசிரியராகவும் திகழ்ந்தார்.

இலக்கிய பங்களிப்புகள் (எழுதிய நூற்கள்)
இலங்கையில் இஸ்லாம்
அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்
மொழி பெயர்ப்புக் கலை
மிஸ்ரின் வசியம்
கிழக்காபிரிக்காக் காட்சிகள்
ஆபிரிக்க அனுபவங்கள்
தமிழ் யாத்திரை
மலேசியப் பயணம்

சிறு குறிப்பு
சிறந்த கல்விமானாக, அரசியல் வாதியாக, சமூக சேவையாளராக, எழுத்தாளராக, சொற்பொழி வாளராக, முஸ்லிம் தமிழறிஞராக, தமிழ் அபிமானியாக, உலகம் இன்றுவரை போற்றக்கூடிய உத்தம பருஷராக வாழ்ந்து இவ்வுலகை விட்டும் பிரிந்தார்.

இறப்பு
1973ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டும் பிரிந்தார் ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ அல்லாஹ் அன்னாரது மேலான அனைத்து சேவைகளையும் பொருந்திக் கொள்வானாக. மேலும் அன்னாரது தங்குமிடத்தை ஜன்னதுல் பிர்தௌஸாக ஆக்கி வைப்பானாக!

*

*

Top