இயல்பு வெளிப்பாடுகளை வைத்து மனிதர்களை அளவிடுவது தவறு

Barack Obama

- செல்வநாயகம் ரவிசாந்த் 

16.04.2007 ஆம் ஆண்டு படு கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரும், கவிஞரும், இலக்கிய வாதியுமான ‘எஸ்போஸ்’ எனப்படும் சந்திரபோஸ் சுதாகரின் நினைவுப் பகிர்வு நிகழ்வு மறுபாதிக் குழுமத்தின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை 16.04.2016 பிற்பகல் -4 மணிக்கு ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள புதிய உயர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

விமர்சகர் சி.ரமேஸ் நிகழ்வை முன்னிலைப்படுத்தினார். கவிஞர் கருணாகரன், ஆசிரியர் பெருமாள் கணேசன், ஆசிரியர் ப. தயாளன், எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், சமூக ஆய்வாளர் தெ . மதுசூதனன், கவிஞர் தானா விஷ்ணு ஆகியோர் எஸ்போஸுடனான தமது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தி.செல்வமனோகரன், கிரிஷாந்த், யதார்த்தன், யோ. கெளதமி ஆகியோர் எஸ்போஸின் கவிதைகளை வாசித்தனர் .

இந்த நினைவுப் பகிர்வு நிகழ்வில் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கவிஞர் கருணாகரன் எஸ்போஸுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கையில்,

ஒரு காலகட்டத்திலே அவர் வன்னியிலே போராளியாக இருந்த காலகட்டத்திலும், போராட்ட அமைப்பிலிருந்து வெளியே வந்த பின்னர் பத்திரிகை நிறுவனங்களில் வேலை செய்யும் காலகட்டங்களிலும் என்னில் தொடங்கி அவர் மோதாத ஆட்களே கிடையாது. இவ்வாறான மோதல் போக்குடைய காலகட்டங்களில் கூட கவிதை, கடிதங்கள் என அற்புதமாக எழுதுவார். ஊடகவியலாளராக வர வேண்டுமென்பதற்காக ஊடகக் கற்கை நெறியை மேற்கொண்டார்.

கூரிய வாளை விட, துப்பாக்கிச் சன்னத்தை விட,கூரிய ஊசியை விட அவரது எழுத்துக்கள் கடுமையானதாக இருக்கும். மிகக் கொடுமையான விடயம் , ஒரு இரவுப் பொழுதில் அவரது 7 வயதுப் பிள்ளை கண் முன்னால் கொல்லப்பட்டது தான். வவுனியாவில் அப்போதிருந்த சக்திகளுக்கு எதிராக எஸ்போஸ் கடுமையாகப் போராடினார். அவரது மரணத்திற்கு யார் தான் காரணமென முற்றுமுழுதாக இனங்காண முடியாவிட்டாலும் அவரது கடிதப் பிரதிகளை வைத்து அவரது மரணத்துக்கு யார் காரணமென எங்களால் புரிந்து கொள்ள முடியும். எஸ்போஸ் புரிந்து கொள்ள முடியாத ஒருவராக அவருடைய வாழ்க்கைக் காலகட்டத்தில் திகழ்ந்தாலும், அவரது இறப்பின் பின்னர் அவரது பன்முக ஆளுமை எங்களின் அகவிழிகளை அவர் மீது திறந்து விட்டுள்ளது’ என்றார்.

எஸ்போஸிற்குக் கல்வி கற்பித்த பெருமாள் கணேசன் தனது நினைவுகளைப் பகிருகையில்,

எங்களுடைய காலகட்டத்தில் வாழ்ந்த தரமான கவிஞன் சந்திரபோஸ் சுதாகர். இவருடைய மூதாதையர்கள் யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்கள். நெடுந்தீவு அழகான தமிழ்மொழி வளர்ந்த ஊர். நெடுந்தீவிலே வா.செ.ஜெயபாலன், அநாமிகன் உட்படப் பல கவிஞர்களும், எழுத்தாளர்களும் வாழ்ந்தனர். அந்தச் சமூகத்திலிருந்து வெளிவந்த ஒருவராகவும், தமிழ்ச் சமூகத்திற்குப் பெருமை சேர்த்த கவிஞராகவும் சுதாகரன் காணப்படுகிறார். இதுவரை காலமும் அவனது படைப்புக்கள் தொகுத்து வெளியிடப்படவில்லை என்பது வேதனை தரக் கூடிய விடயமாகவே உள்ளது.

நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவரது படைப்புக்களை வெளிக்கொண்டு வர வேண்டிய தேவையுள்ளது. சுதாகர் என்ற மிகப் பெரும் இலக்கிய ஆளுமை எங்கள் மண்ணில் வாழ்ந்ததற்கு அடையாளமாக அவனுடைய பதிவுகள் நிச்சயம் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். குறிப்பிடத்தக்க மொழி ஆளுமையைத் தனது கவி எழுதும் ஆற்றலால் வெளிப்படுத்திய எஸ்போஸை தமிழ் இலக்கிய உலகம் என்றும் மறந்து விடக் கூடாது. அந்த வகையில் சுதாகரை மாணவனாக நான் பெற்றதையும், இலக்கியத் தடத்தில் அவனை நெறிப்படுத்துவதற்கு வாய்ப்புக் கிடைத்தமையையும் என் வாழ்வின் பேறாகவே கருதுகிறேன்.’

அவரது சகபாடியும். தற்போது ஆசிரியப் பணி மேற்கொண்டு வருபவருமான தயாளன் தனது நினைவுப் பகிர்வில்,

அந்தக் காலகட்டத்திலேயே முற்போக்குச் சிந்தனையுடையவராகக் காணப்பட்ட சுதாகர் சில கால இடைவெளியில் எங்களுடன் இணைந்து கொண்டார். வகுப்பறையில் சுதாகர் மூன்றாவது வரிசையில் தான் இருப்பார். ஆசிரியர் ஆங்கில பாடம் கற்பித்துக் கொண்டிருக்கும் போது சுதாகர் கற்பித்தலைச் செவிமடுக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவுமில்லாமல் புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருப்பார் அல்லது கொப்பியின் நடு ஒற்றையைக் கிழித்து ஏதாவது எழுதிக் கொண்டேயிருப்பார். இவ்வாறான பழக்கம் அவர் தன்னைப் போராளியாக ஈடுபடுத்திய காலகட்டத்திலேயே காணப்பட்டது.

அவர் ஈழநாதம் பத்திரிகையிலிருந்து வெளியேறி வெளிச்சம் என்ற சஞ்சிகையிலும். ஈழநாடு பத்திரிகையிலும் பணி செய்தார். அவர் முன்னர் இயற்கை, காதல் உணர்வுக்குட்பட்ட வகையிலும், பின்னர் சமூகச் சீர்திருத்தத்திற்குட்பட்ட வகையிலும், சமகாலத்திற்குட்பட்ட வகையிலும் தனது கவிதைகளை எழுதினார். இதன் பின்னர் மிகத் தீவிரமான புதிய சொல் முறைக்குட்பட்ட வகையில் கவிதைகளை எழுதினார்.

அதன் பின்னர் அவர் வன்னியிலிருந்து வெளியேறி வவுனியாவில் குடியேறிய நிலையில் அவருக்கும் எங்களுக்குமிடையிலான தொடர்பு இல்லாமல் போனது. பின்னர் 2000 ஆம் ஆண்டு நான் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த போது தான் சுதாகரை வவுனியாவில் சந்தித்தேன்.

அப்போது நானும் நண்பர்களும் சுதாகருடன் சேர்ந்து வவுனியாவில் உணவகமொன்றில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது பாதுகாப்புக் கெடுபிடிகளும், அச்சுறுத்தல்களும் மிகுந்த ஒரு காலகட்டம் நிலவியது. ஒரு புரட்சியின் அடையாளமான நூலை அவர் தனது கைகளில் வைத்து எமக்குக் காட்டிக் கொண்டிருந்தார். வவுனியா கடவுளாலேயே கைவிடப்பட்ட இடம், மிகக் கவனமாக இருக்க வேண்டும் என முன்னரே எமக்கு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.

ஆனால், அவர் எந்தவித அச்ச உணர்வுமில்லாமல் அந்த நூலை தன்னுடன் வைத்திருந்தமை எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதனுடைய விளைவோ அல்லது வேறு காரணங்களோ தெரியவில்லை மூன்றாம் நாள் சுதாகரை அவரது வீட்டில் வைத்துப் பிடித்து உதைத்துக் கைது செய்து இழுத்துச் சென்றனர். ஒரு வாரம் வரை கடுமையான சித்திரைவதைகளை அனுபவித்து ஊடக நண்பர்களின் அழுத்தம் காரணமாக வெளியில் வந்தார். அதன் பின்னர் எல்லாத் தரப்புடனும் ஒத்துப் போகாத தன்மை காணப்பட்ட காரணத்தால் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு முகம் கொடுத்தார். எனினும் அவரது அடிமனதில் தெளிவானதொரு பாதை இருந்தது. அந்தப் பாதை என்ன? என்பது தற்போது புலப்பட ஆரம்பித்துள்ளது.

2007ஆம் ஆண்டு வன்னியில் யுத்த நெருக்கடியான காலகட்டத்தில் ஏப்ரல் மாதம் -17 ஆம் திகதி நான் பயந்து பயந்து சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு போராளி என்னை நோக்கி வந்து ‘சுதாகரை ஏன் சுட்டவங்கள்’ என்று கேட்டார். எனக்கு அப்போது தான் முதல் நாள் சுதாகர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற விடயம் தெரிய வந்தது.

சுட்டுக் கொல்லப்பட்ட சுதாகரை நினைத்துக் கவலைப்படுவதா? அல்லது நான் பாதுகாப்பாக வீட்டுக்குப் பாதுகாப்பாகச் சென்று சேர்வதா? என்ற எண்ணத்தில் அவ்விடத்தை விட்டு உடனடியாகச் சென்று விட்டேன். பின்னர் சற்று ஆறுதலாகவிருந்து யோசித்த போது தான் சுதாகரின் இறப்பு என் மனதை வெகுவாக வாட்டியது.

அவரது கையெழுத்துப் பிரதிகளைப் பின்னர் வாசித்துப் பார்த்த போது, சுதாகரின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதை எம்மால் ஊகிக்க முடிந்தது. சுதாகரின் இறப்பு நிச்சயமாக அரசியல் காரணங்களுக்காக இடம்பெறவில்லை. அவர் வவுனியாவிலிருந்த காலகட்டத்தில் சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த காரணத்தால் அது சில அரசியல்வாதிகளின் செல்வாக்குகளுக்குட்பட்டுக் கையாளப்பட்டிருக்கக் கூடும். இதுவே அவரது இறப்பிற்கும் காரணமாகவிருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எமக்கிருக்கிறது . சுதாகர் என்ற இலக்கிய ஆளுமையை இளம் வயதில் இல்லாமல் செய்தமைக்கு அவரை இல்லாமல் செய்தவர்களே பதில் கூற வேண்டும்’ என்றார்.

இளம் கவிஞரான தானா விஷ்ணு தனது நினைவுகளைப் பகிர்கையில்,

அவரது முகத்தில் சிரிப்பைக் காண்பது மிகவும் அரிதாகவிருக்கும். எங்களுடன் எப்போதும் மச்சான் என்று தான் கதைப்பார். முதலாவது எனது கவிதைத் தொகுப்பு விஷ்ணு என்ற பெயருடன் தான் வெளிவந்தது. ஆனால், சுதாகர் எனது அப்பாவின் பெயர் என்ன? எனக் கேட்க நான் தம்பிமுத்து விஷ்ணு எனத் தெரிவித்தேன்.

அவர் எனது பெயரை தானா விஷ்ணு என்ற பெயரில் எழுதினால் நன்றாகவிருக்கும் எனச் சொன்னார். அன்றிலிருந்து என் பெயரை நான் தானா விஷ்ணு என மாற்றிக் கொண்டேன். இன்று வரை என்னை யாராவது தானா விஷ்ணு என அழைக்கும் போதும் அல்லது எழுதும் போதும் சுதாகரின் நினைவுகளே அடிக்கடி என் ஞாபகத்துக்கு வரும். வவுனியாவில் இருந்த காலகட்டங்களில் சுதாகரிடமிருந்து நான் அதிகமான நூல்களை வாங்கி வாசிப்பேன். என்னை எழுத்துத் துறையில் வளப்படுத்திய இலக்கிய நண்பராகவும் அவர் காணப்படுகிறார். எங்களுடன் நீண்ட நேரமாகச் சம்பாஷணையில் ஈடுபடும் போது அவனது பேச்சில் அதிகார வர்க்கத்துக்கு எதிரான கோபமும், வேகமும் அதிகம் காணப்படும்.

ஆருயிர் நண்பனான சுதாகர் இறந்து 9 வருடங்கள் கடந்து சென்றுள்ள நிலையில் அவனைப் பற்றி எழுத முற்படும் போதெல்லாம் என்னால் எழுத முடிவதில்லை. இன்று கூட அவனைப் பற்றிப் பேச முடியவில்லை. ஏனெனில் எங்களுக்கிடையிலான நட்பு அவ்வாறான இறுக்கமான பிணைப்புக் கொண்டதாக அமைந்திருந்தது. நண்பன் சுதாகரின் மரணம் எங்கள் மனங்களில் ஆறாத வடுக்களை உருவாக்கியுள்ளது’ என்றார்.

Related posts

*

*

Top