சம்பந்தரின் வழி?

– நிலாந்தன்

ண்மையில் நடந்த நாடாளுமன்ற அமர்வொன்றின்போது தினேஸ்குணவர்த்தன வழமைபோல சிங்களத்தில் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தர் வழமைபோலதன் கையில் இருந்த சிறிய டப்பாவுக்குள் இருந்து பாதாம் பருப்புக்களை வாயில் போட்டு மென்று கொண்டிருந்திருக்கிறார். தேர்தல் காலங்களிலும் அவர் இவ்வாறு பாதாம் பருப்பை மெல்வதை பலரும் கண்டிருக்கிறார்கள். மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்காக அவர் இப்படி பாதாம் பருப்பைச் சாப்பிடுவதுண்டு என்றும் அவரது கையில் பாதாம் பருப்பு டப்பாவை இடைக்கிடை காண முடியும் என்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nilanthanதான் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருக்கும் போது சம்மந்தர் சாவகாசமாக பாதாம் பருப்பை மென்று கொண்டிருந்தது தினேஸ் குணவர்த்தனவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் சம்மந்தரை நோக்கி ஆங்கிலத்தில் உரையாற்றியிருக்கிறார். ‘நாட்டின் முக்கிய பிரச்சினை ஒன்றைக் குறித்து நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் போது பொறுப்புமிக்க ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் பாருங்கள்’ என்று அவர் கோபமாகக் கேட்டிருக்கிறார். ஆனால் சம்பந்தரோ அதைப் பொருட்படுத்தவே இல்லையாம். தினேஸ் குணவர்த்தனவின் வார்த்தைகளால் தீண்டப்படாதவராக அமைதியாக அமர்ந்திருந்தாராம்.

தினேஸ் குணவர்த்தனவின் வார்த்தைகள் மட்டுமல்ல அதைவிட பாரதூரமான விடயங்களும் கூட சம்மந்தரைத் தீண்டுவதாகத் தெரியவில்லை. அண்மையில் அவரைச் சந்திக்கச் சென்ற விடுதலை செய்யப்பட்ட இரண்டு அரசியல் கைதிகளையும் அவர் பொருட்படுத்தவில்லை. வேலை கூடிய நாட்களில் சில முக்கியத்துவமற்ற சந்திப்புக்களின் போது அவர் இவ்வாறு பத்திரிகை வாசித்துக் கொண்டோ அல்லது வேறு அலுவல்களைப் பார்த்துக் கொண்டோ சந்திக்க வந்தவர்களோடு உரையாடுவதுண்டு என்று அவரை நன்கு தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். விடுவிக்கப்பட்ட கைதிகளின் சந்திப்பின்போதும் அப்படித்தான் நடந்திருக்கிறது. அந்தக் காட்சிப் படம் பிடிக்கப்படுவதைக் கூட சம்பந்தரால் உணர முடியவில்லை. அவரைச் சுற்றி இருப்பவர்களும் அந்தக் காட்சி வெளியே வரும்பொழுது ஏற்படக் கூடிய விளைவுகளைக் குறித்து முன்னெச்சரிக்கையோடு சிந்தித்திருக்கவில்லை. அந்தக் காட்சி இணையத்தில் பகிரப்பட்டு சம்பந்தருக்கு எதிராக ஆவேசமான எதிர்ப்பைத் தூண்டிவிட்ட போதும் சம்பந்தர் அதையிட்டு பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.

விடுவிக்கப்பட்ட கைதிகளின் சந்திப்பையும் அவர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அச்சந்திப்பில் அவர் நடந்து கொண்டது தொடர்பான விமர்சனங்களையும் அவர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. இது தொடர்பில் தனித்தனிக் கட்டுரைகள் எழுதப்படும் அளவிற்கு அவர் மீதான விமர்சனங்கள் செறிவாகவும் கூராகவும் காணப்பட்டன. கடந்த ஏழாண்டு காலப்பகுதிக்குள் ஈழத் தமிழ் அரசியல் பரப்பில் அதிகம் ஆக்ரோஷமாக விமர்சிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவராக அவர் காணப்படுகிறார். சமூக வலைத்தளங்களின் பெருக்கமும் இதற்கு ஒரு முக்கிய காரணம். ஆனால் இந்த விமர்சனங்களை அதிகம் பொருட்படுத்தாத ஒருவராகவும் அவர் காணப்படுகின்றார்.

ஆயின் அவர் எதைத்தான் பொருட்படுத்துவார்? தினேஸ் குணவர்த்தனவுக்கு வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவர் பதில் கூறியிருந்தார். அதைப்போலவே சுரேஷ் பிறேமச்சந்திரனுக்கு வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பதில் கூறியிருந்தார். ஆனால் தமிழ் மக்களின் மையப்பிரச்சினைகள் தொடர்பில் அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களைக் குறித்து தனக்கு வாக்களித்த மக்களோடு அவர் மனந்திறந்து பேசியுள்ளாரா? ஒருமுறை நெல்சன் மண்டேலா சொன்னார் ‘வன்முறை மிகவும் வலிமையான ஆயுதம் அல்ல மக்களோடு பேசுவதுதான் மிகவும் வலிமையான ஆயுதம்’ என்று. சம்பந்தர் அதைப்பற்றி என்ன நினைக்கிறார்?

தமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தி மிகப்பாரதூரமான அளவிற்கு சரிந்து வருகிறது. நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்ற முற்பட்ட போது அதற்குரிய முகப்புரையை அகற்றுமாறு சிறிலங்கா சுதந்திரக்கட்சி கேட்டிருந்தது. சரியாக மூன்று மாதகால இழுபறிக்குப் பின் மைத்திரி–ரணில் அரசாங்கம் அதற்கு ஒப்புக் கொண்டது. அதன் பின்னரே நாடாளுமன்றம் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்டது. இது தொடர்பில் அண்மையில் லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஓர் இணைய ஊடகச் செயற்பாட்டாளர் இக்கட்டுரையாசிரியரோடு தொலைபேசியில் கதைத்தார். ‘முகப்புரை நீக்கப்பட்டது என்பது ஒரு உத்தியோகபூர்மான தகவலா?’ என்று கேட்டார். ஏனெனில் சில மேற்கத்தேய தூதரக அதிகாரிகள் அப்படி முகப்புரை நீக்கப்படவில்லை என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்கம் அப்படி நீக்கப்போவதாக ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டு அதை நீக்காமலேயே தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பதாக அவர்கள் நம்புவதாகவும் அவர் சொன்னார். இது எதைக் காட்டுகிறது?

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதற்காக எதிர்க்கட்சிகளுக்கு பொய் சொல்கிறது என்று சில மேற்கத்தேய நாடுகளின் ராஜதந்திரிகள் நம்புகிறார்கள் என்பதைத்தானே? அதாவது இந்த ஆட்சியானது மெய்யாகவே ஒரு நல்லாட்சிதான் என்றும் அது தமிழ் மக்களுக்கு நன்மையைத் தான் செய்யும் என்றும் சில மேற்கத்தேய ராஜதந்திரிகள் நம்பும் அளவிற்கு மைத்திரி–ரணில் அரசாங்கமானது சில மேற்கத்தேய நாடுகளுக்கு அதிகம் விருப்பத்துக்குரிய அரசாங்கமாக மாறியிருக்கிறது. அப்படி இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நன்மையை மட்டும்தான் செய்யும் என்று சம்பந்தரும் நம்புகிறாரா? கிளிநொச்சியில் அவர் படைமுகாமிற்குள் நுழைந்தமை தொடர்பான சர்ச்சையானது அவர் எந்தளவிற்குப் பலவீனமான ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார் என்பதைக் காட்டியுள்ளது.

அண்மையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த பொழுது கட்சியின் பிரதானிகளைச் சந்தித்திருக்கிறார். சந்திப்பின் போது வடக்குக் கிழக்கு இணைக்கப்பட்ட ஒரு சமஸ்டித்தீர்வைத் தவிர வேறெந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவ்வாறு ஒரு சமஸ்டித் தீர்வுக்கான நிலமைகள் தென்னிலங்கையில் காணப்படுகின்றனவா?

அவர் இவ்வாறு கூறிச் சில நாட்களுக்குப் பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் மகிந்த சமரசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரானகபீர் காசிமும் சமஸ்டிக்கு எதிராகத் திட்டவட்டமாக கருத்துத் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக தமிழ் மக்கள் பேரவையும், வடமாகாண சபையும் தமது தீர்வு முன்மொழிவுகளில் சமஸ்டியை முன்வைத்த பின்னர் தென்னிலங்கையில் உள்ள கடும்போக்காளர்கள் மறுபடியும் கலையாடத் தொடங்கி விட்டார்கள். தென்னிலங்கையில் சமஸ்ரி அச்சநோய் (federal phobia) மறுபடியும் ஒரு தொற்றுதோயைப் போலப் பரவத் தொடங்கி விட்டது. குறிப்பாக அண்மை வாரங்களாக நிகழ்ந்து வரும் கைதுகளின் பின்னணியில் அந்த அச்சநோய் அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்தெடுக்கப்படும் ஆபத்து அதிகரித்து வருகிறது.

அதுமட்டுமல்ல அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டமக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவராக உள்ள வழக்கறிஞர் லால் விஜயநாயக்க கடந்தவாரம் தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநிதிகளுக்கு என்ன சொல்லியிருக்கிறார்? தமது தீர்வு முன்மொழிவை மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவிடம் பேரவை சமர்ப்பித்தபொழுது அவர் சொன்னாராம் ‘அரசாங்கம் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு தீர்வையே ஏற்றுக்கொள்ளும் என்று’ அதுமட்டுமல்ல தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் சாதி வேறுபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார். அதாவது உபமுரண்பாட்டை அல்லது அகமுரண்பாட்டை உருப்பெருக்கிக் கையாண்டு பிரதான முரண்பாட்டை திசைதிருப்பும் ஓர் உத்தியே அது. அவர்கள் தீர்வொன்றைக் கண்டுபிடிப்பதில் விசுவாசமாக இல்லை. இத்தகையதோர் பின்னணியில் சம்பந்தர் கோரிநிற்கும் சமஸ்டித் தீர்வை எவ்வாறு அடையப் போகிறார்? அதுவும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அதை எவ்வாறு அடையப் போகிறார்?

மகிந்த மறுபடியும் மேலெழக் கூடாது என்பதற்காக மேற்குநாடுகள் மைத்திரி–ரணில் அரசாங்கத்திடம் ஒப்பீட்டளவில் நிபந்தனையின்றி தங்கியிருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. மகிந்தவின் காலத்தில் மேற்கு நாடுகளால் போடப்பட்டிருந்த தடைகள் இப்பொழுது அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த அரசாங்கத்திற்கு நோகக் கூடிய விதத்தில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் எந்தவொரு நகர்வையும் மேற்கு நாடுகள் இப்போதைக்கு எடுக்கப் போவதில்லை. தமது பேரம் பேசும் சக்தி ஒப்பீட்டளவில் அதிகமாய் இருக்கிறது என்ற துணிச்சல் காரணமாக அரசாங்கமும் மேற்கு நாடுகளை ஓரளவிற்கு வெட்டியோட முயற்சிக்கிறது. சமநிலையான ஒரு வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றப் போவதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். அதன் மூலம் மகிந்தவின் வீழ்ச்சிக்குப் பின் சீனாவுடனான உறவில் ஏற்பட்ட நெருடல்கள் அல்லது விலகல்களை அவர் சரிசெய்ய முற்படுகிறார். ஒரே சமயத்தில் இந்தியாவையும் சீனாவையும் மேற்கு நாடுகளையும் ஏதோ ஒரு விதத்தில் திருப்திப்படுத்தலாமா என்று அவர்கள் முயற்சிப்பது தெரிகிறது.

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு முன் எப்படி நந்திக் கடற்கரையில் இந்தியாவையும், சீனாவையும் அமெரிக்காவையும் ஒரே கோட்டில் வெற்றிகரமாக நிறுத்தி புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்தார்களோ அதேபோல இப்பொழுதும் இம்மூன்று தரப்புக்களோடும் முரண்படா ஒரு போக்கை அவர்கள் கைக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அது அவர்களுடைய பேரம்பேசும் சக்தியை மேலும் உயர்த்தும். இம்முயற்சியில் அவர்கள் வெற்றி பெறுவார்களாக இருந்தால் தமிழ் மக்களின் நிலைமை மேலும் பரிதாபகரமாக மாறும். அப்பொழுது 13ஆவது திருத்தத்தைப் பலப்படுத்தும் ஒரு தீர்வுக்கும் அப்பால் சிங்களத் தலைவர்கள் இறங்கிவரத் தயாராக இருப்பார்களா? அல்லது அவர்கள் தரக்கூடிய ஓர் அரைகுறைத் தீர்வை ஏற்றுக் கொண்டு படிப்படியாக அதைப் பலப்படுத்துவோம் என்று சம்பந்தர் கூறப்போகிறாரா? அவர் அவ்வாறு கூறுமிடத்து அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழும். அப்பொழுதும் அவர் இப்பொழுது செய்வதைப் போலவே அந்த விமர்சனங்களைப் பொருட்படுத்தாமால் தன்பாட்டில் போய்க்கொண்டே இருப்பாரா?

Related posts

*

*

Top