பீடாதிபதிகள் 2017இல் நடைபெறும் துணைவேந்தர் தேர்தலை மட்டும் நோக்கியே செயற்படுகின்றனர்

உலக வங்கியின் பல மில்லியன் ரூபா உதவிகளும் பல்வேறு கட்டிட நிர்மாண மற்றும் புனருத்தாரண பணிகளுக்கு செலவிடப்பட்ட மேலும் பல மில்லியன் ரூபாவும் உரியவகையில் செலவிடப்பட்டதா என்ற முழுமையான கணக்காய்வு மிகவும் அவசியமாகும். அத்துடன் உள்ளகக் கணக்காய்வு சுதந்திரமான முறையில் இடம்பெறுவதில்லை. பீடாதிபதிகள் சிலர் 2017இல் இடம் பெறவுள்ள துணைவேந்தர் தேர்தலை நோக்காகக் கொண்டு மட்டுமே செயற்படுகின்றனர். என யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் தமது மேதின அறிக்கையில் (2016) தெரிவித்துள்ளனர்.

அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மே தினச் செய்தி – 2014

எமது 2014 மேதினச் செய்தியில், அந்நாளில் மிக விரைவாக சரிந்து சென்று கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தின் பெறுமதியை மீண்டும் மேல்நோக்கி உயர்த்த வேண்டிய எமது கடப்பாடு பற்றி  அன்றைய கடினமான சூழலுக்குள் இருந்தவாறே  சுட்டிக்காட்டியிருந்தோம்.

பல்கலைக் கழகத்தின் மீதான உயர்கல்வி அமைச்சின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட தலையீடு பற்றியும், அதுமட்டுமன்றி அந்த அமைச்சைச் சாராத பிற அரசியல்வாதிகளின் தலையீட்டுக்கு உயர்கல்வி அமைச்சு அனுசரணை வழங்கியது பற்றியும், தமது பதவி நலன்களுக்காக பல்கலைக் கழகத்தின் சுயாதிபத்தியத்தையும், உயர்ந்த மரபுகளையும் அடகு வைத்த பல்கலைக்கழக நிர்வாகிகள் பற்றியும் சுட்டிக்காட்டி இவர்கள் என்றாவது ஒருநாள் பல்கலைக்கழக சமூகத்திற்கு பதில் கூறித்தான் ஆக வேண்டுமெனவும் இடர் மிகுந்த அந்தக் கால கட்டத்தில் எமது பிரதேச மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் மெளனம் காப்பதுபற்றியும் குறிப்பிட்டிருந்தோம்.

பல்கலைக்கழகத்தை ஆளும் அதிகார சபையான பேரவை கண்ணியமும், நேர்மையும் மிகக் கொண்ட சான்றோரைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தால் மட்டுமே எமது பல்கலைக் கழகத்தை மீண்டும் சரியான வழித்தடத்தில் செலுத்த முடியும் எனக் குறிப்பிட்டு அதற்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பின் அவசியம் குறித்தும், தென்னிலங்கையை சார்ந்த சான்றோர் உட்பட மக்கள் குழாத்தின் ஆதரவின் அவசியம் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம்.

2015 மேதினச் செய்தி

எமது 2015 மேதினச் செய்தியில் அத் தினத்திற்கு சில நாட்கள் முன்பதாக அரசியற் சாக்கடைக்குள் தோய்ந்திருந்த பழைய பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் முற்றாக அகற்றப்பட்டு உயர் தரமிக்க புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமை குறித்து எமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தோம். அதே தருணம் பல்கலைக் கழகத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் பற்றி முழுமையான விசாரணையொன்றை வேண்டி நின்றோம்.

முழுமையான பக்கச் சார்பற்ற விசாரணைகளுக்கு வேண்டிய சூழல் விரைவில் உருவாகுமென அத்தருணம் நம்பிக்கையும் வெளியிட்டிருந்தோம். புதிய பேரவையின் உருவாக்கத்தில் சிவில் சமூக அமைப்புகளும், மக்களின் பேராதரவைப் பெற்ற பிரதிநிதிகளும் சமூக அக்கறையுடன் செயற்பட்டிருந்தனர் என்பதையும். நன்றியுடன் நினைவுகூர்ந்திருந்தோம்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை:

எமது பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை முழுமையான பக்கச்சார்பற்ற விசாரணையென்பது எமது பல்கலைக்கழகத்தில் இதுவரை இடம்பெறாதது மிகப்பெரும் துரதிருஷ்டமாகும். தமது பதவி நலன்களுக்காக பல்கலைக்கழக நலன்களை அடகு வைத்து செயற்பட்ட அதே நிர்வாகிகளே தொடர்ந்தும் கோலோச்சுகிறாள்கள்.

கடந்த காலப்பகுதியில் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்ட சிலருக்கு நியாயம் கிடைத்த போதும், மேலும் பலர் நியாயம் வேண்டி காத்திருக்கின்றனர். போதனை சாரா ஊழியர்களைப் பொறுத்தவரை தாபன நிர்வாகம் மிகப் பெருமளவிற்கு திறனற்றதாக காணப்படுகிறது. மிகப் பல ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவில் கணிப்பீட்டு தவறுகள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றை சீர் செய்வதற்கு உரிய பொருத்தமான வழிமுறைகள் கண்டறியப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறுகள் திருத்தப்படுகின்றன. சிறு விடயங்களை சீர் செய்வதற்கும் சகிக்க முடியாத காலதாமதங்கள் காணப்படுகின்றன. 2008 முதல் 2014 வரை இடம்பெற்ற அரசியல் ஆட்சேர்ப்பில் உள்வாங்கப் பட்டவர்களின் கல்விச் சான்றிதழ்களை உறுதிப்படுத்தும் பணி நீண்டகாலதாமதத்தின்பின் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகின்றபோதும் இப்பணியை ஆற்றவேண்டியவர்கள் உண்மையான அக்கறையுடன் செயற்படாமல் ஊழியர் சங்கத்தை ஏமாற்றும் நோக்குடனேயே செயற்படுகின்றனர்.

ஓரிரு முக்கிய பிரிவுகளில் காட்டுராஜா அல்லது காட்டுராணி போல் நிர்வாகிகள் தர்பார் நடாத்துவதையும், பலவீனமான துறைத்தலைவர்கள் சிலர் அரசியற் செல்வாக்குள்ளதாக கூறும் தமது அலுவலக உதவியாளர்களை கோலோச்ச அனுமதிப்பதையும் பற்றிய புகார்கள் எமக்கு கிடைத்த வண்ணமேயுள்ளன.

அத்துடன் நிர்வாகத்திறனற்ற முறையான தகுதிகளற்ற அல்லது முறையற்ற விதங்களில் தமது நலன்களை அடைந்த நிர்வாக அதிகாரிகளை பயன்படுத்தி அல்லது அச்சுறுத்தி பல்கலைக்கழக தலைமையானது பல நிர்வாகக் குழறுபடிகளையும் பாரபட்சமான நடவடிக்கைகளையும் ஊழியர்களுக்கெதிராகவும் நியாயம் கேட்போருக்கெதிராகவும் செய்துவருகின்றமை பட்டவர்த்தனமானது.

துரதிருஷ்டவசமாக இதனால் பாதிக்கப்பட்ட சமூக அமைப் புக்களும் தனிநபர்களும் இதற்கெதிராக வெளிப்படையாக கண்டனங்களையோ கருத்துக்களையோ ஆகக் குறைந்தது உண்மையில் தாம் எவ்வண்ணம் பாதிக்கப்பட்டோம் என்கின்ற தகவல்களையோ வெளியிடாமை கவலைக்குரிய விடயமாகும். 2008இன் பின் இடம்பெற்ற அரசியல் தலையீடுகளால் மோசமான பின்னடைவைச் சந்தித்த எமது பல்கலைக்கழக நிர்வாக இயந்திரத்தை மீள முன்னோக்கிசெலுத்தல் கடினமானதொரு, ஆனால் தவிர்க்க முடியாத பணியேயாகும்.

கலைப்பீடத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சில விரிவுரையாளர்களால் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக புகாரிட்டுள்ள மாணவிகளுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களை விடுவிப்பதற்கு பல்வேறு வழிகளிலும் பல்கலைக்கழக நிர்வாகம் முயன்று வருகின்றது.

அண்மையில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வொன்றில் துணைவேந்தர் மாணவிகளுக்காக பரிந்து உரையாற்றியமை வெளியுலகை ஏமாற்றும் செயற்பாடேயென்பதை பல்கலைக்கழகத்தில் நடப்பவற்றைத் தொடர்ந்து அவதானித்து வருபவர் எவரும் இலகுவாகப் புரிந்துகொள்வர். பாலியல் தொந்தரவுகளும் பரீட் சைப் பெறுபேறுகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளமையால் இயல்பாக உருவாகியிருக்க வேண்டிய மாணவர் கிளர்ச்சி கட்டிப்போடப்பட்டுள்ளது.

அண்மையில் இராமநாதன் நுண்கலைக் கழகத்துக்கு புதிய கல்வியாண்டுக்கான மாணவர் அனுமதிக்காக இடம்பெற்ற செய்முறைப் பரீட்சையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. கூடியணு புள்ளியைப் பெற்றோரும், க.பொ.த. (உயர்தரம்) மற்றும் வடஇலங்கை சங்கீத சபை பரீட்சைகளில் உயர் பெறுபேறுகளைப் பெற்றோரும் செய்முறைப் பரீட்சையில் சித்தியடையவில்லை. இம் மாணவர்கள் துணைவேந்தள் ஊடாக பல்கலைக்கழக பேரவைக்கு புகாரிட்டபோதும், பல்கலைக் கழக துணைவேந்தர் இவ்விடயத்தை பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இணைத்துக் கொள்ளவில்லை. பல்கலைக்கழக பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய வழியேற்படுத்தும் 2012 ஆம் ஆண்டின் 978 இல சுற்றுநிருபத்தின் போதாமை காரணமாக மாணவர்களின் பாதிப்புகள் தொடரவே செய்கின்றன.

எதிர்காலத் திட்டமிடலுக்காக தென்னிலங்கை நிபுணர்களுக்கு வாரியிறைக்கப்படும் தொகைக்குரிய பலன் கிட்டுமா என்பது சந்தேகத்துக்குரியதாகும். தனியார் மயமாக்கலுக்கூடாக நிறைவேற்றப்பட்ட பணிகளையும், இதற்கென செலவிடப்பட்டு வரும் தொகையினையும் பொறுப்பு வாய்ந்தவர்கள் ஒப்பு நோக்குவதாக தெரியவில்லை.

இந்நிலையில் பல்கலைக்கழக ஆசிரிய, மாணவ, ஊழியர் சங்கங்கள் மிகுந்த முனைப்புடன், விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். தமது சொந்த நலன்களை மையமாகக்கொண்டு இவ்வாறான அமைப்புக்களின் செயற்பாடுகளை திசை திருப்ப முனைபவர்கள் அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்பட வேண்டும். சிவில் சமூக அமைப்புக்கள் தமது கனவான் முகமூடிகளைக் கழற்றி வைத்துவிட்டு, பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேச வேண்டும்.

Related posts

*

*

Top