மெலிஞ்சி முத்தனின் ‘அத்தாங்கு’

– சி.ரமேஸ்

போரினுள் பயணித்துக் கொண்டு உருமாறிக்கொண்டு இருக்கும் உறவுகளையும் தாங்கொண்ணா துயரங்களையும் உள்வாங்கி. வலியோடும் ரணங்களோடும் புதையுண்ட போயிருக்கும் ஈழதேசத்தையும் அதன் மாந்தர்களையும் சித்திரிக்கும் நாவலே அத்தாங்கு.

துறவியாக அடையாளப்படுத்தப்பட்ட பாதிரியாரின் சுயசரிதைப் போக்கில் அமையும் இந்நாவல் சாதியத்தின் பெயரால் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் கதையை கூறுகிறது. யாழ்ப்பாணத்தின் கருகப்பனையில் இருந்து வெளியேறி கடலோரத்தில் தமக்கான குடியிருப்புக்களை அமைத்துக் கொண்ட மக்களை யுத்தம் துண்டாடுகிறது. மூப்பர் அந்திராசிக்கும் சிந்தாத்திரைக்கும் பிறந்த மத்தேயு தவழ்ந்து திரிந்து கட்டிளமைப் பருவத்தைக் கடந்து திருமணம் முடித்து வாழ முற்பட்ட நேரத்தில் குழந்தைகளுடன் மூடுண்ட வெளிக்குள் அவர் எதிர்கொண்ட இடர் நாவல் முழுதும் விரவி நிற்கிறது.

கிளாளிக்கு அருகில் அமைந்திருந்த பண்டிதர் குடியிருப்பில் வைத்து இயக்கத்துக்கு செல்லும் மத்தேயுவின் மகள் மதுரா. மக்களின் சுமைகளைத் தூக்கி பிழைப்பு நடாத்தும் மரியசீலன். மரவியாபாரம் செய்யும் மச்சான் சவரிக்குட்டி. ஒரு தலைப்பட்சமாய் மதுராவை காதலிக்கும் சவரிக்குட்டியின் மகன் நத்தானியல் பாதிரியாருடன் இணைத்துப் பேசப்படும் எமிலி எனப் பாத்திரங்கள் பலவற்றை ஒன்றிணைத்து விரியும் நாவல் கிளாலியில் இடம்பெற்ற கடற்போக்குவரத்தைப் பேசுகிறது. இராணுவத் தாக்குதலுக்குள்ளாகி அழிவுண்ட மக்களின் கதையை துயரத்தால் எழுதி செல்லும் இந்நாவல் மீனவ சமூகத்தின் உயிர்ப்பான வாழ்வியலை படம் பிடித்துக் காட்டுகிறது.

Related posts

*

*

Top