அசேதன இரசாயனப் பாவனைக்கு முற்றுப்புள்ளியும் மாற்றீடும்!

– பேராசிரியா் கு.மிகுந்தன்

லவகை நோய்கள், இனந்தெரியாத இளகிய மனமற்ற நோய்கள். வயது வேறுபாடின்றி பல அங்கங்களை கபளீகரம் செய்துவிடுகின்ற ஆபத்தான சூழ்நிலை. உலகம் ஆக்கத்தை நோக்கி செல்வதாக நினைத்து அழிவினை சூழ்ந்து கொள்ள வைத்திருக்கின்றது. பசுமைப்புரட்சியின் செயலூக்கத்தின் முக்கியமான இடுபொருளான உள்ளீடுகளில் குறிப்பாக அசேதன இரசாயன பாவனை எதிர்பார்த்த அளவைவிட தாண்டிவிட்ட நிலையில் அதன் தாக்கமாககுறிப்பாக நாம் வாழுகின்ற சூழலை மாசடைய வைத்துவிட்டது. இனியென்ன? இனிவரும் சந்ததிக்கு வாழ வழியில்லாமல் செய்துவிட்டு இதைவிட என்ன கொடுக்கப் போகின்றோம்?. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதனை நாம் மறந்துவிட்டோமே. இயற்கையின் குழந்தைகளாக வளரவே ஒவ்வொரு உயிரும் விருப்பப்படுகின்றது. அது தான் நியதி. சுகபோகமாக வாழப்பழகியபின் உடற்சுகத்தை விரைந்து இழக்க வேண்டிய நிலையிலேயே மனிதகுலம் இருக்கின்றது. இறுதியில் எல்லாம் முடிந்தபின் யாரை நொந்து என்ன பயன்? வரும்போது கொண்டு வராததை இடையில் ஆடியோடி பெற்றுவிட்டு அதனை அனுபவிக்ககூட கொடுத்து வைக்காது இடைவழியில் செல்வதில் என்ன இருக்கின்றது? அதற்காக எதுவுமே செய்யாது நூறு வருடங்கள் வாழ்ந்தும் எந்த பயனுமில்லை. நாம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமுண்டு. ஒவ்வொருவர் வாழ்க்கையும் பெறுமதியானது அதற்கொரு வரலாறும் உண்டு.

Prof.G.Mikunthanஅசேதன இரசாயனங்களின் தேவை புதிய திருந்திய கலப்பினப்பாக்கம் செய்யப்பட்ட பயிர் இனங்களுக்கு அவசியம் என்பதனை எக்காலத்திலும் தவிர்க்க முடியாது. உணவினை அதிகளவில் உற்பத்தி செய்வதற்கான நோக்கமாக இருந்தாலும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளைத் தவிர்த்து உற்பத்தி என்பதனை மட்டும் நோக்கியது தவறு என காலந்தாழ்த்தியே விஞ்ஞானமும் உணர்ந்திருக்கின்றது. பாரம்பரிய பயிரினங்களில் இந்தவிதமான உள்ளீடு அவசியம் இல்லை என்பதும் கிடைக்கின்ற கூட்டுரம் மற்றும் சேதனப்பசளைகளின் மூலம் பயிருற்பத்தி செய்ய முடியும் என்றும் எம்மூதாதையர் செய்ததும் சொல்லிச்சென்றதும் அவசியம் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். மாறாக திருந்திய கலப்பினப் பயிர்களை பயிர்செய்வதாயின் அதற்கு தேவையான ஊட்டச் சத்துக்களை அசேதன இரசாயனவடிவில் கொடுக்காது இயற்கையை அனுசரித்த மாற்றீடான வழியில் உயிர்ப்பசளைகளையும் நன்மைதரும் நுண்ணங்கிகளையும் பயன்படுத்தி வெற்றிகாணலாம். பல்லாண்டுகளாக நடைபெற்ற ஆய்வுகள் புலப்படுத்தும் இந்த சூழலுக்கிணைவான எளிய தொழில்நுட்பங்கள் எமக்கு அவசியம் தேவையானதும் இனியும் எமது சூழலை மாசுபடுத்தாது வைப்பதற்குமான முயற்சியாகும்.

எங்களூரில் உள்ள வளத்தை நாம் சரியாக இனங்காணவில்லை. அதனை நாம் முழுமையாக இனங்கண்டு பயன்படு;த்தினால் எமது பயிர்ச்செய்கை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிடலாம். அண்டை நாடுகளில் இவ்வகைத் தொழில்நுட்பங்கள் பரந்து பட்ட அளவில் பயன்படுத்தப்படுகின்றன. எமது நாட்டில் உள்ள வளங்களனைத்தும் இன்னமும் முழுமையாக இனங்காணப்படாத நிலையில் அவற்றை இனங்காண்பதின் ஊடாக பயிர்ச்செய்கைக்கு தேவையான வழியில் அவற்றை பயன்படுத்த வேண்டும்.

உயிர்ப்பசளைகள் மண்ணுக்கு மேலும் உரமூட்டுவதுடன் மண்ணில் நன்மைதரும் உயிரினங்களினதும் நுண்ணுயிரிகளினதும் எண்ணிக்கையை அதிகரிக்கும் வல்லமையுள்ளன. மேலும் இவற்றினால் சூழலுக்கான பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுகின்றது. அசேதன இரசாயன பசளைகள் மற்றும் பீடைநாசினிகளை பயன்படுத்துவதனால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு உயிர்ப்பசளைகள் மற்றும் நன்மைதருகின்ற நுண்ணங்கிகளினால் ஏற்படாது. மேலும் அசேதன இரசாயன பசளைகளில் பயிர் அகத்துறிஞ்சியது போக மீதமானவை மண்ணில்செறிவாகி நீர்நிலைகளை அடைந்துவிடுகின்றன. இன்னும் பீடைநாசினிகள் மரக்கறிப்பயிர்கள் மற்றும் பழங்களில் செறிவாகி அவற்றினை நாம் உணவாக்கும் போது எமது உடலுக்குள் சென்று தீங்கினைத் தருகின்றன. இவ்விரசாயனங்களுக்கு மாற்றீடாகதான் உயிர்ப்பசளைகளும் நன்மை தரும் நுண்ணங்கிகளின் பிரயோகமும்.

எங்கள் பிரதேசத்தில் வளரக்கூடிய இவ்வாறான உயிர்ப்பசளைகள் மற்றும் எமது மண்ணில் இருக்கின்ற நன்மைதருகின்ற மண்வாழ்நுண்ணங்கிகளைப் பயன்படுத்துவதனால் எந்தவித பிரச்சனையும் எழ வாய்ப்பில்லை. மாறாக எமது மண்ணை நன்மைதரும் நுண்ணங்கிகள் நிறைந்த சிறந்த பயிர்செய்நிலமாக மாற்றுவதற்கான வாய்ப்பினை நாம் பெறுகின்றோம். அத்துடன் நச்சுத்தன்மையான அசேதன இரசாயன பசளைகளையும் பீடைநாசினிகளையும் பயன்படுத்துவதனை தவிர்த்து சேதன முறைமூலமான உயிர்வாழ் பசளைகள் மற்றும் நுண்ணங்கிகளைப் பயன்படுத்தும் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும். மண்ணில் வாழும் நன்மைதருகின்ற உயிரினங்களினை நாம் முழுமையாகப் பயன்படுத்துதல் சிறந்தது. சுகாதார கட்டுப்பாட்டுகளை முறையாக பேணி இவ்வாறான பசளைகளையும் நுண்ணங்கிகளையும் நாம் விருத்தி செய்து ஏனையவர்களும் பயன்படுத்த உக்கமளிக்க வேண்டும். அநேகமானவை சேதன கழிவுகளை மீள்சுழற்சி செய்வதன்மூலம் நன்மைதரும் நுண்ணங்கிகளை விருத்தி செய்யக்கூடியனவாக இருப்பதனால் இதுவும் நன்மைதரும் விடயமாகும்.

எமது சூழல் மாசுபடுவதை மேலும் தடுப்பதற்கான செயன்முறைகளில் இந்த வகையான முயற்சிகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும். அதுவும் மேலைத்தேய பன்னாட்டு நிறுவனங்களின் இவ்வாறான பொருட்களை இங்கு சந்தைப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காகவும் எங்களூர் மக்களின் உற்பத்தியாக எம்மவர்க்கு வேலைவாய்ப்பினை வழங்கும் சந்தர்ப்பமாக நடைமுறைப்படுத்தும் மற்றும் சூழலைப் பாதுகாக்கும் எந்த திட்டத்திற்கும் நாம் முன்னுரிமை கொடுத்து ஊக்கமும் கொடுக்க வேண்டும். சூழலுக்கிணைவான பசளைப் பிரயோகமும் பீடைக்கட்டுப்பாடும் எமது பிரதேசத்து பயிர்ச்செய்கையை சேதனமுறை மூலமானதாக ஆக்குவதற்கு பெரிதும் உதவும். எமது பிரதேசத்தை நாம் காப்பாறினாலன்றி வேறெவர் செய்வார். அதனை நாம் எதிர்பார்க்கவும் முடியாது. தன்கையே தனக்குதவி. ஒற்றுமையே எமது பலம். அதனை நாம் சிதறவிடவும் கூடாது.

Related posts

*

*

Top