பதின் பருவம் புதிர் பருவமா?

– வைத்தியர் ஆ.காட்சன்

மனநல மருத்துவரிடம் ஒரு முறை கலந்தாலோசித்து விட்டு வாருங்கள்’ என்று யாராவது அறிவுரை சொல்லிவிட்டால், உடனே பலரும் ‘என்னைப் பார்த்தால், பைத்தியம் மாதிரியா தெரியுது?’ என்று சட்டென்று கோபப்பட்டு விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை மனநல மருத்துவம் என்றாலே மிக வித்தியாசமாக நடந்துகொள்ளும் நோயாளிகள் மட்டும்தான் ஞாபகத்துக்கு வரும். சாதாரணத் தூக்கமின்மை முதல் வெளிப்படையாகத் தெரியாத சின்னச்சின்ன வித்தியாசங்கள்கூட மனநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

ஏராளமான மனநலப் பாதிப்புகள் இருந்தாலும் மனநல மருத்துவத்தைப் பொறுத்தவரை மனச்சிதைவு நோய் (Schizophrenia), இருதுருவ மனநோய் (Bipolar mood disorder) ஆகிய இரண்டும் பெரிய நோய்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், இவை இரண்டும் குணப்படுத்தக் கூடியவையே.

ஏன் ஏற்படுகிறது?
மனச்சிதைவு நோய் என்பது மூளை நரம்புகளில் டோபமைன், குளூட்டமேட் என்ற ரசாயனங்களில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகிறது. இது மரபணுக்கள் மூலமாகப் பரம்பரையாகத் தொடர்ந்துவர வாய்ப்பு அதிகம். சிலருக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றித் தானாக ஏற்படும். சிலருக்கு வாழ்க்கையின் ஏதாவது முக்கியப் பிரச்சினைகளின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தின் போதோ இழப்புகளின் போதோ அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும். குடிப் பழக்கம், கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவதும்கூட மனச்சிதைவுக்கு நெருக்கமான நோய் அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.

வளர்இளம் பருவமும் மனச்சிதைவும்
மனச்சிதைவு நோயில் எட்டு வகைகள் உள்ளன. இவற்றில் மூன்று வகையான மனச்சிதைவு நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் வளர்இளம் பருவத்தின் பின்பகுதியான 17 வயதுக்கு மேல் வெளிப்பட ஆரம்பிக்கும். சில வேளைகளில் படிப்பில் நாட்டமின்மை, பள்ளியைப் புறக்கணித்தல், எளிதில் ஆக்ரோஷம் அடையும் தன்மை உட்படச் சில நடவடிக்கை மாற்றங்கள் 15 வயதுக்குப் பின்னர்க் காணப்படலாம்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வளர் இளம்பருவத்தில் ஆரம்பிக்கும் ஹெபிஃபிரேனியா (Hebephrenia) என்ற ஒருவகை மனச்சிதைவு நோயானது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், தானாக ரோட்டில் சுற்றித் திரியும் அளவுக்குக் கொண்டுபோய் விடுவதால் ஆரம்ப நிலையிலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்வது பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும்.

அறிகுறிகள்
பின்வரும் அறிகுறிகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டவை இருந்தால் மனச்சிதைவு நோயாக இருக்கலாம். இதில் பெரும்பாலான அறிகுறிகள் வலிப்பு நோய், மூளைக் காயம், பக்கவாதம், ஞாபக மறதி நோய், மன அழுத்த நோய் போன்ற வேறு மனநோய்களிலும் காணப்பட வாய்ப்பு இருப்பதால் மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே, இதை உறுதி செய்ய முடியும்.

 தனது உயிருக்கு ஏதோ ஒருவிதத்தில் ஆபத்து இருக்கிறது என்ற தேவையற்ற பயம்.

 தன்னைப் பற்றிதான் பிறர் பேசுகிறார்கள், கேலி செய்கிறார்கள் என்ற தேவையற்ற சந்தேக எண்ணம்.

பிறர் தன்னை மாயசக்தி மூலமோ, எலக்ட்ரானிக் கருவிகள் மூலமாகவோ கட்டுப்படுத்துவதாகத் தோன்றுவது

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாயக்குரல்கள் காதில் பேசுவது போன்ற கேட்பது.

பிறர் கண்களுக்குத் தெரியாத உருவங்கள் தங்களுக்குத் தெரிவதாகச் சொல்வது.

தானாகப் பேசிக்கொள்வது மற்றும் சிரித்துக்கொள்வது மற்றும் சம்பந்தமில்லாத பேச்சுகள்.

சந்தேக எண்ணங்களால் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது.

எதிலும் நாட்டமில்லாமல் இருப்பது, சுத்தம் பேணுவதில்கூட மந்தமாக இருப்பது.

தூக்கமின்மை, சாப்பிடுவதில் வித்தியாசம்.

 ஒரே இடத்தில், ஒரே நிலையில் மணிக்கணக்கில் அமர்ந்து அல்லது நின்று கொண்டிருப்பது.

தற்கொலை எண்ணங்கள், யாரோ தன்னைச் சாகத் தூண்டுவதாகச் சொல்வது.

தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த இயலாத தன்மை, எதிலும் நாட்டம் இல்லாமல் சோம்பலாக இருப்பது.

உடலும் மனமும் வேறல்ல
மருத்துவத் துறையில் மனநல மருத்துவத்தைப்போல வேறு எந்தப் பிரிவும் கடும் எதிர்ப்புகளையும் சவால்களையும் சந்தித்ததில்லை. அதேநேரம் மனநோய்களைப் பற்றி மக்களிடம் நிலவும் கண்ணோட்டமும் பல மாற்றங்களை அடைந்து வருகின்றன. குறிப்பாக மனச்சிதைவு நோய், ‘எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குவான்’ என்பது மாதிரிப் பல விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. சிகிச்சையைப் பொறுத்தவரையில் உடல் நோய்களுக்கும் மனநோய்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

நீரழிவு நோய், இதயப் பிரச்சினை இருந்தால் காலம் முழுக்கவும், ஆஸ்துமா இருந்தால் குளிர்காலம் போன்ற குறிப்பிட்ட மாதங்களிலும், காய்ச்சல், வாந்தி இருந்தால் சில நாட்களுக்கு மட்டும் மாத்திரை சாப்பிடுகிறோம். இதைப்போலத்தான் சில மனநோய்களுக்குப் பல வருடங்களுக்கும், சில மனநோய்களுக்குக் குறிப்பிட்ட கால அளவு மட்டும் மாத்திரை சாப்பிட வேண்டியுள்ளது. சில நோய்களுக்குக் கவுன்சலிங் என்ற ஆலோசனை மட்டும் போதுமானதாக இருக்கும். மனச்சிதைவு நோயும் அதன் பல வகைகளுக்கும் இந்த மூன்று சிகிச்சை கால அளவுகளுக்கும் பொருந்தக்கூடியவைதான்.

பெற்றோர் செய்ய வேண்டியவை
மனச்சிதைவின் அறிகுறிகள் தெரிந்த உடன் சிகிச்சை அளிப்பது, நோய் முற்றி விடாமல் தடுக்கும். பெரும்பாலும் முற்றிய நிலையே மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் போவதற்கு முக்கிய காரணம்.

இந்தப் பின்னணியில் பேய்க் கோளாறு என்று சொல்லிக் கட்டிப்போடுவதோ, அடிப்பதோ ஆக்ரோஷத் தன்மையை அதிகரிக்கும்.

இவர்கள் எளிதில் போதைப் பழக்கத்துக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதால், தீவிரக் கண்காணிப்பு தேவை.

நோய் அறிகுறிகள் மறைந்துவிட்டால், உடனே மாத்திரையை நிறுத்திவிடக் கூடாது. மருத்துவர் குறிப்பிடும் காலம்வரை மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பக்க விளைவுகள் இருந்தால் மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாற்று மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். தற்போது பக்கவிளைவுகள் குறைந்த அல்லது இல்லாத மாத்திரை வகைகள் கிடைக்கின்றன.

நோயாளி மாத்திரை சாப்பிட ஒத்துழைக்காத பட்சத்தில் மாதம் ஒருமுறை போடக்கூடிய ஊசி மருந்துகளை மருத்துவர் பரிந்துரை செய்வார்.

சில நேரம் ஆரம்ப அறிகுறிகள் அதிகமாக இருந்தால் மின்அதிர்வு சிகிச்சை (Electro convulsive therapy) நல்ல பலனைத் தரும். இது மாத்திரைகளைவிட பாதுகாப்பானதும்கூட.

நோய் அறிகுறிகள் குறைந்த உடன் அப்படியே விட்டுவிடாமல் உடற்பயிற்சி, வேலைத்திறன் பயிற்சிகளை ஆரம்பித்துவிட வேண்டும். இல்லையென்றால் சோம்பல் தன்மை ஏற்பட்டு எந்தவித உத்வேகமும் இல்லாத நிலைக்குப் போய்விட வாய்ப்பு உண்டு.

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்.

*

*

Top