அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் மக்களின் அனைத்து விடயங்களிலும் அரசு தலையிடுகிறது

Barack Obama

- துன்னாலைச் செல்வம்

அபிவிருத்தி என்பது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக் கூடியதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

தமிழர் நிலங்களில் தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாது அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்கள பெரும்பான்மையினரின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறது. அதாவது காப்பெற் வீதியைப் போட்டுத் தென்னிலங்கையில் இருந்துவரும் வியாபாரிகள் இலாபம் ஈட்டுவதற்கான வழி அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இந்த அபிவிருத்தி தமிழ் மக்களுக்கு தேவையில்லை. இதனை தமிழ் அரசியல்வாதிகள் தொடக்கம் சிங்கள அரசுக்கு சேவை செய்யும் தமிழ் அதிகாரிகள் வரை கவனத்தில் எடுப்பதாக இல்லை.

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் அனைத்து விடயங்களிலும் அரசு கைவைக்கலாம் என்று எண்ணுகின்றது. அதனால் எலும்புத் துண்டுக்காகக் காத்துக் கிடக்கும் தமிழ் அரசியல்வாதிகளை மட்டும் யாழ்.நகர அபிவிருத்திக் கூட்டத்தில் பங்குபற்ற வைத்திருக்கிறது.

உலக வங்கியின் 58 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் யாழ். நகரை அபிவிருத்தி செய்வது தொடர்பான திட்டம் குறித்த கலந்துரையாடல் ஒன்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நகர அபிவிருத்தி தொடர்பாக ஆலோசனைகளை வழங்குவதற்காக வடமாகாண ஆளுநரால் நகர அபிவிருத்திக்காக குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையிலேயே யாழ். நகரின் முக்கிய இடங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் உறுப்பினர்களில் பலர் கலந்து கொள்ளவில்லை.

வடமாகாண நிர்வாக அதிகாரத்துக்கு உட்பட்ட விவகாரங்களில் கூட அதனுடன் கலந்தாலோசித்து அனுமதியைப் பெற்றுக் கொள்ளாது தாங்கள் நினைத்தவாறு பல திட்டங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் ஆளுநர் எம்முடன் கலந்தாலோசிக்காது யாழ். நகர அபிவிருத்தித் திட்டம் பற்றி கூட்டம் நடத்துகிறார் என்றும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்ற போது இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன் ஆகிய எம்பிக்கள் கொழும்பில் இருந்து வந்துள்ளதாகத் தெரிவித்தார். அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் நேரடியாக பேச முன்வர வேண்டும் எனவும் ஆளுநர் ஊடாக பேச வேண்டிய அவசியம் எதுவும் இல்லை எனவும் அவர்களை எம்மவர்களாகவே இப்போதும் கருதுகிறோம்.

ஆளுநர் எம்முடன் கலந்தாலோசிக்காது யாழ்.நகர அபிவிருத்தித் திட்டம் பற்றி கூட்டம் நடத்துகின்றார். அத்திட்டம் பற்றி எமது வடமாகாண சபையானது அதனோடு சம்பந்தப்பட்ட அனைவருடனும் சென்ற வருடத்தில் இருந்தே பேசி வருகின்றோம். அவற்றின் பெறுபேறுகளை எங்களுடன் கேட்டு அறியாது ஆளுநர் கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார். அவ்வாறான கூட்டத்தை நடத்தாது எம்முடன் முதலில் பேசுவதே சிறந்தது என்று ஆளுநருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன் கடிதம் பற்றி ஆளுநர் என்னுடன் பேசியிருந்தார்.

சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன் என்போர் இதற்காக கொழும்பில் இருந்து வந்துள்ளதாகக் கூறியிருந்தார். அப்படியானால் அவர்களுடன் கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துகளை எமக்குத் தெரிவியுங்கள் என்று கூறிவிட்டு வந்துள்ளேன் என்றார்.

யாழ் நகர் அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் வடமாகாண சபையின் பங்கு முக்கியமானது. அதாவது முதலமைச்சரிடம் இது சம்பந்தமாக பேசியிருக்க வேண்டும். இதனை விட்டுவிட்டு நல்லிணக்க அரசு என்று ஒன்றுமே செய்யாத சிங்கள அரசை தோளில் தூக்கி ஆடும் சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன் போன்றோரை அழைத்து யாழ்.நகர் அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தை ஆளுநர் நடத்தி முடித்து விட்டார்.

இந்தக் கூட்டத்தில் எவர் தமிழர் தரப்பில் பங்குபற்ற வேண்டும் என்பது அரசுக்குத் தெரியும். அப்படிப் பட்டவர்களை பங்குபற்ற வைத்ததன் காரணம் இந்த அபிவிருத்தி தென்னிலங்கைக்கு பயனை ஏற்படுத்தித் தரும் என்பதால் ஆகும்.

Related posts

*

*

Top