காலநிலைக்கேற்ற துணிச்சலான விவசாயம்!

– பேராசிரியா் கு.மிகுந்தன்

முன்னொரு காலமும் எதிர்பார்த்திராதவாறு உலகளாவிய ரீதியில் காலநிலையில் மாற்றங்களை அனைத்து நாடுகளும் பரந்து பட்ட அளவில் உணரத் தொடங்கியிருக்கின்றன. இந்த நிலை எம்மைப் பொறுத்தவகைளில் மிகவும் முக்கியமானதாகும். இயற்கையின் விபரீதமென சுருக்கமாக நாம் குறைபட்டுக் கொண்டாலும் இன்னும் அலட்டிக் கொண்டாலும் இந்த விபரீதத்திற்கான காரணத்தை நாம் முழுமையாக புரிந்து கொள்ளவும் அதன்மூலம் இம்மாற்றத்தின் விளைவுகளை விவசாயத்திற்கு அனுசரணையானதாக மாற்றிடவும் வேண்டும். இல்லாதுபோனால் இம்மாற்றத்தின் எதிர்த்தாக்கத்தினை நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும். காலநிலை சடுதியாக மாறுகின்றது போல தோற்றமளித்தாலும் இது ஆண்டாண்டு காலமாக படிப்படியாக ஏற்பட்ட மாற்றமாகவே இருக்கின்றது. இதனை நாம் ஆரம்ப காலங்களில் பெரிதுபடுத்தியிருக்கவில்லை. ஆனால் தற்போது அதனது தாக்கம் அழிவுகளை ஏற்படுத்தும் போது அதனை எம்மவர்கள் உணரத்தலைப்படும் போது காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் கண்ணால் காணக்கூடியதாயிருக்கின்றது. அழிவுகளும் எல்லைமீறி உயிரிழப்புக்களையும் சொத்துக்களுக்கு நாசத்தையும் செய்திருக்கின்றது.

Prof.G.Mikunthanஅண்மையில் எமது நாட்டில் பெய்த கனமழையும் அதனால் பல உயிரிழப்புக்கள் நிகழ்ந்ததையும் பார்த்தும் கேட்டபோது அனைவரினதும் மனம் பதைபதைத்தது உண்மையே. உயிரிழப்புக்கள் எந்த வகையாயினும் தவிர்க்கப்பட வேண்டியனவையே. கனமழையினால் மண்சரிவேற்பட்டு மண்ணுக்குள் புதையுண்டவர்களின் சோகக் கதைககள் மனதை நெருடுவதாகவே இருக்கின்றது. பெய்த மழைவெள்ளம் பாய இடமின்றியும் பாயும் பாதை தடைப்பட்டும் போன காரணத்தால் வெள்ளமாகி பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்து நாசஞ்செய்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தை 2004 இல் வெள்ளத்தினுள் அமிழ்த்திய நிஷா புயல் செய்த அழிவுகளைப்போல கொழும்பில் இம்முறை இந்த அவலம் நடந்திருக்கின்றது. பலரது வீடுகள் வெள்ளத்தினுள் அமிழ்ந்து போய் தற்போது தண்ணீர் வடியும் போது வந்து சேர்ந்த குப்பைகளை அகற்றுவதே பெரும்பாடாகியிருக்கின்றது. வீடுகளில் பயன்பாட்டில் இருந்த பொருட்களனைத்தும் வெள்ளம் இழுத்து வந்து குப்பைகளாக மாற்றியிருக்கின்றது. இந்த குப்பைகளை அகற்றுவதில் மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கின்றது. படித்த கல்விமான் ஒருவர் இந்த வெள்ள அவலத்தினுள் அகப்பட்டு தற்காலிகமாக இடம்பெயர்ந்ததை கூறி தற்போது தான் இடப்பெயர்வின் தாக்கத்தை தான் அனுபவமூடாக உணர்ந்ததாகவும் நண்பரின் வீட்டில் தங்கியிருந்ததாகவும் கூறியபோது இங்கு நடந்த இடப்பெயர்வும் அதன்பின்னரான உயிரிழப்புக்கள் உடமைகளின் சேதம் என்பனவற்றை தாம் உணரக்கூடியதாகவும் கூறினார். இயற்கை சிலவேளைகளில் பலருக்கு துன்பத்தையும் சிலருக்கு படிப்பினையையும் தந்து விடுகின்றதனை காணலாம். இதுவும் இயற்கையின் திருவிளையாட்டல்லவா.

காலநிலை மாற்றமடையும் போது அதற்கேற்றதான துணிச்சலான விவசாயத்தை (Climate Smart Agriculture) நாம் செய்ய முயற்சிக்க வேண்டும். இல்லாது விட்டால் காலநிலை மாற்றத்தின் அழிவுக்குள் நாமாகவே சிக்கிவிடுவோம். உலக உணவு தாபனத்தின் இவ்வாண்டுக்கான கருவாக காலநிலைக்கேற்ற துணிச்சலான விவசாயத்தை ஆக்கி அதனை மையப்படுத்திய செயற்பாடுகளை பலநாடுகளில் முடுக்கி விட்டிருக்கின்றார்கள். அந்தவகையில் விவசாய பீடத்தின் இவ்வருட உலகளாவிய ஆராய்ச்சி மாநாட்டின் கருப்பொருளாக ‘காலநிலைக்கேற்ற துணிச்சலான விவசாயத்தை’ தெரிவு செய்து அதற்கு முன்னுரிமை கொடுத்திருப்பது காலத்திற்கேற்ற செயலாக எண்ணலாம். ஆனால் இந்த கருத்தினை மையப்படுத்திய நிகழ்வுகளுக்கு மாநாட்டின் ஒழுங்கமைப்புக்குழு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஆய்வுக்கட்டுரைகளிலும் இக்கருப்பொருள் சார்ந்தவைகளுக்கு தனியிடம் கொடுக்கலாம். இவ்வருட கடைசியில் இவ்வாய்வு மாநாடு கிளிநொச்சியில் அறிவியல் நகரில் நடைபெறவிருக்கின்றது.

காலநிலைக்கேற்றவாறு உணவுற்பத்தியையும் விவசாயத்தையும் மாற்றியமைக்க வேண்டும் என்பது உலக உணவு தாபனத்தின் இவ்வருட உலக உணவு தினத்திற்கான குறிப்பொருள் ஆகும். இதன்படி ஏழு விடயங்களில் நாம் கரிசனை செலுத்த வேண்டியிருக்கின்றது.

முதலாவதாக கால்நடைகளானவை உலகளாவிய ரீதியில் இரண்டில் மூன்று பங்கு விவசாயத்தால் உருவாகும் பச்சைவீட்டு வாயுக்களை வெளியேற்றுகின்றதுடன் 78 சதவீதமான விவசாயத்திலிருந்தான மெதேன் வாயுவை வெளியேற்றுகின்றது. இதனால் கால்நடைவளர்ப்பினை நாம் எமக்கு தேவையான அளவிற்கு பயன்படுத்துவதோடு பச்சைவீட்டு வாயுவை வெளியேற்றுவதை குறைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் இயற்கையாக கிடைக்கும் வளங்களை வினைத்திறனாக பயன்படுத்த வேண்டும். அதில் முக்கிய வளங்களான நீர், மண் என்பன வளமானதாக கிடைக்கக்கூடியதாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மண்ணை வளமானதாக வைத்திருப்பது எந்த இடர்வரினும் அதிலிருந்து சராசரியான விளைச்சலைப் பெறக்கூடியதாக இருக்கும். இதில் நீர் முகாமைத்துவம் என்பது முக்கியமானதும் அவசியமானதுமாகும்.

மூன்றாவதாக உலக உணவு தாபனத்தின் கணக்கீட்டின் படி 2050ம் ஆண்டளவில் உலக சனத்தொகைக்கு உணவூட்ட உற்பத்தியை 60 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டியிருக்கும். அப்படிப் பார்த்தாலும் தற்போதய உற்பத்தியையே காப்பாற்ற முடியாது திண்டாடும் நாங்கள் எப்படி 60 சதவீதத்தினால் அதிகரிக்க முடியும் என தோணுகின்றதல்லவா. இதற்காகத்தான் காலநிலைக்கேற்றவாறான துணிச்சலான விவசாய நடைமுறைகளுக்குள் நாம் உள்வாங்கப்படல் வேண்டும். இந்த மாற்றம் காலவோட்டத்தை வைத்து பார்க்கும் போது மிகவும் அவசியமானதாகும்.

நான்காவதாக உலக உணவு உற்பத்தியில் ஒன்றில் மூன்று பங்கு உணவு விரயமாக்கப்படுகின்றது. இது மிகவும் முக்கியமான விடயமாகும். உணவுஉற்பத்தியை அதிகரிக்க திண்டாடும் நாங்கள் உற்பத்தி செய்யப்பட்ட உணவை பாதுகாக்க முடியாது சிறப்பாக சேமிக்க முடியாது விரயஞ்செய்கின்றோம் எனில் இந்த இழப்பை எந்தவகையில் ஈடுசெய்வது? கிட்டத்தட்ட வருடமொன்றுக்கு 1.3 பில்லியன் தொன் உணவு விரயமாக்கப்படுகின்றது. ஒருபக்கம் பட்டினியால் இறக்கும் மக்கள் இன்னொருபக்கம் உண்ண நிறைவான உணவின்றி நோய்வாய்ப்படும் மக்கள் மறுபக்கம் உணவை விரயமாக்கும் மக்கள். இவற்றிற்கிடையே புரிந்துணர்வு ஏற்பட்டு அனைவருக்கும் உணவு கிடைக்க செய்யும் அதேநேரத்தில் உணவினை விரயமாக்காது பாதுகாக்கவும் வேண்டும்.

ஜந்தாவதாக தற்போது பிடிக்கப்படும் மீன்வகைகளில் 2050ம் ஆண்டளவில் தட்பவெப்ப பிரதேசங்களில் 40 சதவீதமாக குறைவடைந்துவிடும் என்பதாகும். இந்த வகையில் பார்த்தால் மீன் உணவு நலிவடையும் என்பது நல்லதொரு செய்தியல்ல. மீன் உணவிலேயே உணவு பாதுகாப்பு, உணவு ஊட்டச்சத்து மற்றும் நிறையுணவு என்பன தங்கியிருப்பதோடு அது பலருடைய வாழ்வாதாரமாகவும் இருக்கின்றது. எனவே கடல்வளத்தை பாதுகாக்கும் திட்டங்கள் விரைந்து எடுக்கப்பட வேண்டும். சேதுசமுத்திரத்திட்டத்தின் எதிர்விளைவுகளிலொன்றாக மீன்கள் பெருகும் பாறைகளின் அழிவு எடுத்துரைக்கப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். நல்லவேளையாக சேது சமுத்திரத்திட்டத்தின் பங்காளிகள் தமிழகத்தில் ஆட்சியதிகாரத்திற்கு வராத காரணத்தினால் அந்த சுண்ணாம்பு பாறைகள் பாதுகாக்கபபடும் என நாம் நம்பலாம்.

ஆறாவதாக வனஅழிப்பும் வனங்களின் பல்வகைத்தன்மையின் இழப்புமாகும். வனங்கள் பல்வகைத் தன்மையின் சிறந்த இருப்பிடமாகும். அதிலும் வனங்களின் மூலமே மழைவீழ்ச்சி நிர்ணயிக்கப்படுகின்றது. மரங்களை அழித்ததன் விளைவை பல இடங்களில் நாம் உணரத்தலைப்பட்டிருக்கும் நேரத்தில் வனங்களை பாதுகாத்தலும் வேளாண்காடுகளை உருவாக்குதலும் முதலிடம் பெறுகின்றது. ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் திட்டமிடலில் கவனஞ்செலுத்துவோரின் திட்டங்களுக்குள் வனத்தை மீளக்கட்டியெழுப்புதல் அவசியமாக கருதப்படவேண்டியதாகும். வனமீளமைத்தல் திட்டத்திற்கு அனைத்து மக்களின் ஆதரவும் திரட்டி இதை ஒரு மக்கள் இயக்கமாக இயற்கையை நாம் அனுசரிப்பதற்கு கிடைக்கும் அரிய வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஏழாவதாக உலகம் 2030ம் ஆண்டளவில் பட்டினியை முற்றுமுழுதாக ஒழுப்பதென கங்கணங் கட்டியிருக்கின்றது. என்றால் நாம் அனைவரும் அதில் பங்காளிகள். பட்டினியை ஒழிப்பதற்கான செயற்றிட்டங்களை ஒழுங்கமைத்து உணவுற்பத்தியைக் கூட்டி அதிலும் நிறையுணவை கிடைக்கச்செய்து நலிந்த மக்களை மீட்டெடுக்கும் பொறுப்பினைக் கொண்டது. நாம் அனைவரும் இதில் பங்கு கொண்டு பட்டினியை ஒழிப்பதற்கு பாடுபடவேண்டும். தனிப்பட்ட ஒருவரின் செயலே பலவிடயங்களுக்கு ஆறுதலாகவும் பங்களிப்பாகவும் இருப்பதனால் இந்த அரிய நிகழ்வில் அனைவரும் பங்குபற்றுவோம். உணவுற்பத்தியை .இயற்கையை அனுசரித்து அதிகரக்கும் அதே நேரத்தில் இயற்கைக்கு மாறான விடயங்களை நாம் செய்வதனையும் தவிர்த்துக்கொள்ள திடசங்கற்பம் கொள்வோம். சொல்வதைவிட செய்வதற்கு அனைவரும் வேண்டும். வாருங்கள் இனியொரு பசுமைப்புரட்சி இந்த விடயங்களையே சுட்டி நிற்கின்றது.

Related posts

*

*

Top