வெள்ளம் என எதிர்வு கூறியதும் எதிர்பார்த்தபடி நடந்ததும்?

– பேராசிரியா் கு.மிகுந்தன்

ரிச்சல் தந்த உஷ்ண காலநிலை வருட ஆரம்பத்தில் அனைத்தையும் வாட்டிவதக்கிவிட இதற்கு முன் என்றுமில்லாதவாறு உயிர்களனைத்தையும் நோகடித்து விட்டதாகவே உணர்ந்தன. ஒரு வகையில் இயற்கையின் தண்டனையாகவும் இதனைப் பலர் கருதிக்கொண்டனர். வளர்ந்துவரும் விஞ்ஞான உலகத்தில் இதனை சமாளிக்க பல வழிவகைகளிலிருந்தும் அதனை நடைமுறைப்படுத்த முனைய எவருமே முன்வந்ததில்லை. ஏனெனில் உயிர் என்பது அத்தனைக்கு மலிந்து விட்டது.

Prof.G.Mikunthanபெறுமதியில்லாத ஐடமாக ஒவ்வொரு உயிரும் கருத்தப்படுவதனால் இந்த நிலை. திட்டமிடல்கள் பல ஆண்டுகளாக சரியாகத் திட்டமிட்டு நடைபெறாததும் திட்டமிட்டவை சரியாக நடைமுறைப் படுத்தப்படாமையும் இன்னும் எமது மக்களின் அசட்டையும் இதற்கு முக்கிய காரணம். வடிகால்கள் சரியாக இல்லையென்றால் எவ்வாறு மழைநீர் வழிந்தோடும். இந்த யதார்த்தம் இன்னுமேன் இதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியவேயில்லை. இல்லை தெரிந்தும் அதற்குரிய முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை.

இவ்வருடஆரம்பத்தில் எறித்த அதிகூடிய வெப்பநிலையை கருத்தில் கொண்டு பல உலகளாவிய நிறுவனங்கள் இவ்வருடத்தில் வெள்ள அனர்த்தத்திற்கான வாய்ப்பு அதிகமென அடித்துக் கூறியிருக்கின்றார்கள். அதனை முந்தைய கட்டுரைகளிலும் பதிவு செய்திருக்கின்றேன். ஆனால் அதற்கான திட்டங்கள் எதுவும் தீட்டப்பட்டதாக தெரியவில்லை. உஷ்ணத்தை ஓரளவுக்கேனும் தாங்கலாம் ஆனால் வெள்ள அனர்த்தம் வந்தால் அதனை தாங்கும் சக்தி ஏற்கெனவே நொந்து போயிருக்கும் மக்களுக்கு இல்லை. வெள்ள அனர்த்தம் உணவுற்பத்தியை கணிசமான அளவு பாதித்திருக்கின்றது. நட்ட பயிர் விளைந்த பயிர் என அனைத்தும் அள்ளுண்டுபோய் செய்த உழைப்பு வீணாகியதாகவே விவசாயி எண்ணுகின்றார். இயற்கை இப்படி பலமுறை சோதித்தாலும் வருமுன் காக்கும் பழக்கத்தை நாம் இன்னும் கடைப்பிடிக்கத் தவறியிருக்கின்றோமே. இம்முறையும் இதுதானே நடந்திருக்கின்றது.

காலநிலை மாற்றம் எமது நாட்டில் தெளிவாக உணரக்கூடியதாக இருக்கின்றது. வெளிநாடுகளில் பனிக்கட்டி உருகுகின்றது, வெள்ள அனர்த்தம் நடந்திருக்கின்றது இன்னும் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி வந்த செய்திகளெல்லாம் அடிக்கடி நாம் கேட்கக்கூடியதாக இருந்தாலும் எமது பிரதேசத்தில் இயற்கையின் தாண்டவம் பல மாதிரி நடைபெறுவதை நாம் அனைவரும் கண்கூடாக காண முடிகின்றது. இந்த அனர்த்தங்களை எதிர்கொள்வது பற்றி உயர்மட்டங்களில் சரியான திட்டங்கள் தீட்டப்படல் வேண்டும். அந்த திட்டங்கள் மக்களின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். மக்களை அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க தயாராக்க வேண்டும். மக்களுக்கு அனர்தங்கள் பற்றிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படுத்தப்படல் வேண்டும். வரண்ட பூமி திடீரென மேகங் கருக்கொண்டு அடைமழையாக பெய்யும் போது அதனை தாங்கும் சக்தி எமது பூமிக்கு இல்லை. வடிகால்கள் அனைத்தும் கட்டடங்களாக இன்னும் பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன. வந்த தண்ணீர் எங்கு செல்லும். தனக்குத்தெரிந்த பள்ளமான பகுதிகளூடாக பயணிக்க முயற்சிக்கும் போது வீடுகளுக்குள்ளும் அலுவலகங்களுக்குள்ளும் நீர் புகுந்து மக்களை அங்கிருந்து வெளியேற்றியிருக்கின்றது. வாழ்விடங்கள் பல சேதமாக்கப்பட்டிருக்கின்றன. இருந்த சொத்துக்களும் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. நொந்த மக்கள் இருந்ததையும் இழந்து இன்னும் நோகடிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதைப்பற்றி விவாதிப்பதற்கோ கருத்தாடல்கள் நடப்பதற்கோ எவரும் முன்வரவில்லை. புலமையாளர்கள் இந்த அனர்த்தங்கள் பற்றி வெறுமனே கருத்துச்சொல்வதோடு நில்லாமல் ஆக்கபூர்வமான சரியான திட்டங்கள் மூலம் அனர்த்தங்களை எதிர்வுகொள்வது பற்றி எடுத்துச் சொல்லி நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.

காலநிலை மாற்றம் பற்றி கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படல் வேண்டும். எமது பிரதேசத்தில் இது சார்ந்த கற்கைநெறிகளை உள்வாங்குவது நல்லது. காலநிலை பற்றிய தெளிவு எமது மக்களிடையே இருத்தல் அவசியம். இதன் மூலமே நாம் அழிவுகளை குறைப்பதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ இன்னும் உயிரிழப்புக்களை தவிர்ப்பதற்கோ முடியும். வெள்ள அனர்த்தம் ஏற்படும் போதோ அல்லது அதிலொருவர் சிக்கிக்கொண்டால் அவரினது உயிரை பாதுகாக்கவே அல்லது அந்த அனர்தத்திலிருந்து அவரை காப்பாற்றவோ செய்யக்கூடிய முதலுதவி பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தப்படல் வேண்டும்.

இப்போது நாம் 2016 வருடத்தின் நடுப்பகுதியில் இருக்கின்றோம். எதிர்வு கூறியதன்படி வருடக்கடைசி இன்னும் மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகம். இவ்வாறிருக்க அனைவரையும் ஒன்று திரட்டி நாம் வரப்போகும் அனர்த்தத்தினை எவ்வாறு சமாளிக்கப்போகின்றோம் என்பது பற்றி திட்டங்கள் தீட்டி அதற்காக அனைவரையும் தயாராக வைத்திருப்பது அவசியமாகும். பாடசாலையில் பல்கலைக்கழகத்தில் இன்னும் அரச நிறுவனங்கள் மற்றும் சங்கங்களில் இது பற்றிய எழுச்சி வேண்டும். மக்களைக் காப்பாற்ற மக்கள் இயக்கமாக இது முனைப்புப் பெறவேண்டும். இளைஞர் யுவதிகளை இதற்காக நாம் ஒன்றிணைக்கலாம். மாணவர்களை இந்த நடவடிக்கையில் முழுமையாக பயன்படுத்தலாம். அவர்களுக்கான சமூக பொறுப்புணர்வை வளர்க்கும் நிகழ்வாகவும் இது அமையும்.

பயிர்ச்செய்கையில் திட்டமிட்ட பயிர்ச்செய்கை மூலம் பயிரழிவுகளை நாம் காப்பாற்ற முடியும். வெள்ள அனர்த்தம் என்பது எதிர்பாராதது என்றாலும் விஞ்ஞானத்தின் உத்திகளை வைத்துக்கொண்டு அதனை நாம் முகங்கொடுக்க முனைய வேண்டும். அதிகரித்த நீரின் வருகை பயிர்களை திக்குமுக்காட வைத்துவிடும். அதனால் பலவிதமான நோய்;த்தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாகும். இவ்வாறான நிலையில் நோய்த்தொற்றுக்களுக்கு எதிர்ப்புசக்தி கொண்ட பாரம்பரிய இனங்களைத் தெரிவு செய்வது சாலச்சிறந்தது. போட்ட விதைக்கு கொஞ்சப் பயிராவது மிஞ்சும் என்பார் நம்மூர் பெரியவர். உள்ளூர் இனங்கள் வரட்சியையும் வெள்ளத்தையும் தாக்குப் பிடித்து வளரக்கூடியன. அந்த வகையில் அவற்றை நாம் சேமித்து பாதுகாத்து பயிரிடுவது சாலச்சிறந்தது.

மேலும் வரம்புமுறைப் பயிர்ச்செய்கையும் இதில் கடைப்பிடிக்கலாம். வரம்புபோல மண்ணில் அமைத்து அதில் பயிர்களை வளர்த்தால் அவை வெள்ள அனர்த்தம் ஏற்பட்டாலும் அழுகலடையாது பாதுகாப்பாக வளரும். வெள்ளத்தின் அளவைப்பொறுத்து அதற்கு இசைவாக்கக்கூடிய பயிர்களைத் தெரிவுசெய்தால் அதிலிருந்து பயனைப் பெறலாம். இன்னும் வெள்ளம் வடிந்தோடும் பகுதியாயின் ஓரடி அகலத்திற்கும் ஈரடி ஆழத்திற்கும் வாய்க்கால் மற்றும் கிடங்குகளை நீளப்பக்கத்திற்கு நீர்வழிந்தோடக்கூடியது போல அமைத்துக்கொண்டால் பல்லாண்டுத்தாவரங்களை நாம் இயன்றளவு காப்பாற்றிவிட முடியும். அவற்றின் வேர்ப்பகுதியை பாதுகாக்கவும் இம்முறை மூலம் முடியும். குறிப்பாக கொள்கலன்களில் பயிர்செய்யும் முறையை நாம் பின்பற்றலாம். மழை அதிகமானால் உரப்பைகளாலான கொள்ளலன்களில் மண்ணை நிரப்பி அதில் பயிர்செய்ய முடியும். உயர்த்திய பாத்திகளை அமைத்தும் பயிர்களை வேரழுகலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். வெள்ளம் அனர்த்தமாக வரும்போது இருக்கக்கூடிய அனைத்து வழிகளையும் உள்வாங்கி மக்களையும் விழிப்படையச்செய்து அழிவுகளை தவிர்த்துக் கொள்ளவும் சுகாதாரத்தை நாம் பேண வழி வகைகளையும் செய்தல் வேண்டும்.

ஏதிர்வுகூறும் முறைமையை இன்னும் வலுவுள்ளதாக்கி இனிவரும் வெள்ள அனர்த்தங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க நாமனைவரும் ஒன்று சேருவோம். ஓவ்வொருவரும் நினைத்தால் இது முடியும். வாருங்கள் இதற்கான கட்டமைப்பை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம். தன் கையே தனக்குதவி.

Related posts

*

*

Top