இலங்கை நுண்ணங்கியியல் சங்கம்: யாழ்ப்பாணக் கிளை

– பேராசிரியா் கு.மிகுந்தன்

நாம் வாழும் பூமி பல்வகைத்தன்மையுடையது. இந்த பல்வகைத்தன்மையில் பல வகையான உயிரினங்களும் உள்ளடக்கப்படுகின்றன. அவற்றுள் அதிமுக்கியமானவை நுண்ணங்கிகளாகும். நுண்ணங்கிகளின்றி உலகமில்லை என்றாகி விட்டது. நமது வாழ்க்கையில் முற்றுமுழுவதுமாக பின்னிப்பிணைந்ததாக நுண்ணங்கிகள் காணப்படுகின்றன. பல நன்மை தருகின்றனவாகவும் இன்னும் பல தீமை தருகின்றனவாகவும் இருக்கின்றன. இரண்டிலும் சமநிலையைப் பேணுவதிலேயே சூழலில் பேண்தகுதன்மை தங்கியிருக்கின்றது.

Prof.G.Mikunthanநுண்ணங்கிகளைப் பற்றிய அறிவை வளர்க்கவும் அவை பற்றிய தெளிவை மக்களிடையே மாணவரிடையே விவசாய பெருமக்களிடையே ஏற்படுத்துவதற்காகவும் நுண்ணங்கிகள் பற்றிய இணைந்த ஆய்வுகளை மேற்கொள்ளவும் குறிப்பாக நுண்ணங்கியியல் சார்ந்த புலமையாளர்களை இணைப்பதற்காகவும் இலங்கை நுண்ணங்கியலாளர்கள் சங்கம் 2010ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதனது ஆரம்பத்திற்கு முக்கிய காரணகர்த்தாவும் தற்போதய அதன் தலைவியாகவுமிருக்கின்ற வாழ்நாள் பேராசிரியை வசந்தி தேவநேசம் அவர்களாவர். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் நுண்ணங்கியியல் பேராசிரியராக நீண்டகாலம் பணிபுரிந்தவராவர்.

பேராதனை வைத்தியசாலையில் நுண்ணங்கியியல் நிபுணராக பணிபுரிந்துவரும் இவர் இன்றும் துடிப்புடன் பல அரிய ஆராய்ச்சி சார்ந்த விடயங்களையும் இலங்கை தொற்றுநோய்களுக்கான விஞ்ஞான சஞ்சிகையின் பத்திராதிபராகவும் தேசிய விஞ்ஞானமன்றத்தின் ஆராச்சிகளுக்கான ஆலோசகராகவும் பணிபுரிந்து வருவதுடன் பல அரிய விடயங்களை மக்கள் மத்தியில் குறிப்பாக மணவர்களுக்காக சிறப்பாக செயற்படுத்தி வருபவர் என்றால் மிகையாகாது. நுண்ணங்கியியல் பற்றிய அறிவை வடமாகாணத்தில் முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பேராசிரியை வசந்தி தேவநேசம் அவர்களது முழு முயற்சியினால் 2013ம் வருடம் இலங்கை நுண்ணங்கியல் சங்கத்தின் யாழ்ப்பாணகிளை ஆரம்பிக்கப்பட்டு அதன் ஆரம்ப தலைவராக பேராசிரியர் நோபிள் சுரேந்திரனும் (விலங்கியல் துறை) பின்னர் திரு.ஏ.சீ.தவரஞ்சித்தும் (தாவரவியல் துறை) கடமையாற்றியிருக்கின்றார்கள். இவ்வருடத்திற்கான அணிதேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் எழுதும் இக்கைகளை (விவசாய உயிரியல்துறை) தலைவராக்கி, டாக்டர் ருமதிகலாமதி முருகானந்தன் (நுண்ணங்கியியல்துறை) துணைத்தலைவராகவும், கலாநிதி திருமதி தயாளினி திலீபன் (சித்த வைத்தியதுறை) செயலாளராகவும், கலாநிதி செல்வி சிவதர்சினி ராசலிங்கம் (இரசாயனவியல்துறை) பொருளாளராகவும், திரு.எம்.பிரதீஸ் (இணைந்த சுகாதார விஞ்ஞான அலகு) பத்திராதிபராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வாழ்நாள் பேராசிரியை வசந்தி தேவநேசம்

இவர்களுடன் வைத்திய கலாநிதி எம் சத்தியதாஸ் (மருத்துவபீடம்), வைத்திய கலாநிதி தியாகினி நவரட்ணராஐh (மருந்தியல்துறை), டாக்டர் கண்ணதாசன் (ஒட்டுண்ணியியல்துறை), கலாநிதி மனோரஞ்சன் (இரசாயனவியல்துறை), திருமதி யோன் ஞானகாருண்யன் (இணைந்த சுகாதார விஞ்ஞான அலகு), கலாநிதி முருகானந்தன் (ஒட்டுண்ணியியல்துறை) ஆகியோர் உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தசங்கத்தில் பட்டதாரிகள் யாரேனும் நுண்ணங்கிகள் பற்றிய விருப்பிருந்தால் இணைந்து பயன்பெறலாம். விபரங்களுக்கு சங்கத்தின் யாழ்பிராந்திய கிளையின் தலைவரையோ அல்லது செயலாளரையோ அணுகலாம். மாறாக இலங்கை நுண்ணங்கியியல் சங்கத்தின் இணையத்தளமான www.ssmlk.lk இல் விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பாடசாலை பட்டதாரி ஆசிரியர்களும் இதில் இணைந்து கொண்டு பயன்பெறலாம்.

நுண்ணங்கிகளைப் பற்றிய அறிவை மக்கள் மயப்படுத்துதலும் அது பற்றிய ஆய்வுகளில் இணைந்து ஈடுபடுதலை ஊக்குவிப்பதும் நுண்ணங்கிகளின் உலகளாவிய பயன்பாட்டையும் அதனாலான பிரச்சனைகள் குறிப்பாக நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதலும் இச்சங்கத்தின் நோக்கமாக இருப்பதுடன் விசேடமாக யாழ்ப்பாணக் கிளை இவ்விடயங்களை வடமாகாண மக்களுக்கு பலவழிகளில் எடுத்துச்செல்ல தீர்மானித்துள்ளது. நுண்ணங்கிகளைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் எமது ஒவ்வொரு செயற்பாடுகளுக்குள்ளும் நுண்ணங்கிகளின் பங்களிப்பு அதிகமாகவே இருக்கின்றது. நுண்ணங்கிகளில் நன்மை தருகின்றவை பல இருக்கின்றன. அதேபோல நோயை உருவாக்குவனவும் இருக்கின்றன. நுண்ணங்கிகளை உணவாகவும் உட்கொள்ளுகின்றோம் அதில் குறிப்பிடத்தக்கது நாம் விரும்பி உணவாக உட்கொள்ளும் காளான்களாகும். இன்னும் மேலே பார்த்தால் அன்றாடம் பாண் உண்பவர்கள் மதுவம் என்னும் நுண்ணங்கியின் பயன்பாட்டினாலேயே பாண் சுவையானதாக தயாரிக்கப்படுகின்றது என்பதை அறிவீர்.

நுண்ணங்கிகளின் பயன்பாட்டை முழுவதுமாக ஆராய்ந்தால் அவற்றின் பங்களிப்பு அளப்பரியது என அனைவரும் உணர்ந்து கொள்வர். உணவாக, ஊக்கியாக, தாவரத்திற்கு ஊட்டச்சத்தினை வழங்கும் அட்சயபாத்திரமாக, மண்ணிலுள்ள ஊட்டச்சத்துக்களை இலகுவில் அகத்துறிஞ்சதூண்டியாக, நோயாக்கியாக, நோயாக்கிகளை கட்டுப்படுத்தும் உயிரியல் காரணியாக, சேதன கழிவுகளை பிரிந்தழியச்செய்யும் உயிரியல் சக்தியாக, வளமாக்கியாக இப்படி பல வகையில் பங்குபற்றுகின்றன. நுண்ணங்கிகளின் இருப்பு உயிரினங்களின் சத்தியோட்டத்திற்கு அத்தியாவசியமாகும். நுண்ணங்கிகளினால் பலவிதமான நோயெதிர்ப்பு மாத்திரைகள் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் வரப்பிரசாதமாக கிடைத்திருக்கின்றன. நோய்தடுப்பு மருந்தாகும் பெனிசிலின் நுண்ணங்கியிலிருந்து பெறப்பட்டது. உயிரியல் பீடை கட்டுப்பாட்டு காரணியாகவிளங்கும் நுண்ணங்கிகளைப் பற்றி அறிவு அனைவருக்கும் அவசியமானதாகும். அந்த வகையில் விவசாயத்தில் தாவரநோயை ஏற்படுத்தும் நுண்ணங்கிகளைக் கட்டுப்படுத்த நன்மைதரும் நுண்ணங்கிகளை பயன்படுத்துகின்றனர். தாவர நோய்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமே அதேயளவு கரிசனை நுண்ணங்கிகளின் பலத்தின்மேல் இருந்ததாக தெரியவில்லை. நன்மைதரும் நுண்ணங்கிகளை அறுவடை செய்து அவற்றினை பயன்படுத்துவதன் மூலம் நோயாக்கிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்தலாம்.

விவசாயத்தில், உணவு உற்பத்தியில் உணவுசேமிப்பில், சுகாதாரத்தில், மருந்து உருவாக்கத்தில், கழிவகற்றலில், சக்தியுருவாக்கத்தில், இன்னும் பல விடயங்களுக்குதே வையானவகையில் பங்காற்றும் நுண்ணங்கிகள் பற்றி அனைவருக்கும் அறியத்தருவதில் இன்னும் அவற்றைப் பற்றிய ஆய்வுகளை மேலும் விருத்தி செய்வதில் இலங்கை நுண்ணங்கியியல் சங்கத்தின் யாழ்ப்பாணக்கிளை முன்வந்திருக்கின்றது. இனியொரு பசுமைப் புரட்சியில் நன்மைதரும் நுண்ணங்கிகளின் பயன்பாடு அதிகமாக கொள்ளப்படுகின்றது. மண்ணை வளமாக்கும் அரிய முயற்சியில் மண்ணில் வாழும் நன்மைதரும் நுண்ணங்கிகள் பயன்படுகின்றன. சேதனகழிவை சிறந்த உரமாக மாற்றுவதில் நுண்ணங்கிகளுக்கு நிகர் எதுவுமில்லை. இது பற்றி பயனுறு நுண்ணங்கிகள் பற்றிய கட்டுரையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக நுண்ணங்கிகள் பற்றிய அறிவூட்டலில் எதிர்காலத்தில் பல நிகழ்ச்சித் திட்டங்களுடன் இலங்கை நுண்ணங்கியியல் சங்கத்தின் யாழ்பிராந்திய கிளை தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றது எனலாம். இந்த ஆரம்பம் தொடர்ச்சியாக நுண்ணங்கிகள் பற்றிய அறிவூட்டலுக்கு உரமூட்டும் என நம்பிக்கை கொள்வோம்.

Related posts

*

*

Top