திருமறைக் கலாமன்றம் நடத்தும் “கூத்துக்கலைக் கூடல்”

ஈழத்தமிழர்களின் மரபுவழிக் கலைவடிவமான நாட்டுக்கூத்துக் கலையை அழியவிடாது பேணும் முயற்சியின் ஒரு அங்கமாக திருமறைக் கலாமன்றம் நடத்தும் கூத்து விழா இம்முறை ‘கூத்துக்கலைக் கூடல்’ என்னும் பெயரில் எதிர்வரும் 18.06.2016, 19.06.2016 (சனி மற்றும் ஞாயிறு) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் இந்நிகழ்வுக்கென விசேடமாக அமைக்கப்பட்ட மரபு வழிக் களரியில் நடைபெறவுள்ளது.

அரங்க அளிக்கைகள், கருத்தமர்வு, கண்காட்சி, நூல்வெளியீடு என பல்வேறு நிகழ்வுகளுடன் இடம்பெறவுள்ள கூத்துக்கலைக் கூடல் நாட்டுக்கூத்து ரசிகர்களுக்கும், நாடக ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும் பெருவிருந்தாக அமையவுள்ளது.

கூத்துக்கலைக் கூடலின் முதல் நாள் நிகழ்வுகள் 18.06.2016 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும். முதல்நாள் நிகழ்வுகளின் அரங்க அளிக்கைகளாக முல்லைத்தீவு, முள்ளியவளை காட்டா விநாயகர் கலாமன்றம் வழங்கும் கோவலன் கூத்து (முல்லைமோடி), சுழிபுரம், அண்ணா முத்தமிழ் கலைக் கலா நாடக மன்றம் வழங்கும் தர்ம புத்திரன் (வடமோடி நாட்டுக்கூத்து), கட்டுவன், சிவப்பிரகாசம் குழுவினர் வழங்கும் வசந்தன் கூத்து ஆகியன இடம்பெறவுள்ளன.

கூத்துக் கலைக்கூடலின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் 19.06.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை காலை 9.00 மணிக்கு இல.286, பிரதான வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் ஆரம்பமாகும். இதன் போது கூத்து தொடர்பான கருத்தமர்வும், கண்காட்சியும் இடம்பெறும்.

தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு திருமறைக் கலாமன்ற அரங்கில் ஆரம்பமாகும் நிகழ்வுகளில் முதல் நிகழ்வாக அற்றைத் திங்கள் கூத்துருவ நாடக நூல்வெளியீடும் அதனைத்தொடர்ந்து அரங்க அளிக்கைகளும் இடம்பெறும். இதன்போது  மட்டக்களப்பு, கன்னங்குடா பருத்திச்சேனை, கலைமகள் கலைக் கழகம் வழங்கும் அலங்கார ரூபன் (தென்மோடி நாட்டுக்கூத்து), மன்னார், பேசாலை விழிகள் கலாமுற்றம் வழங்கும் இராமபாணம் (மாதோட்ட பாங்கு), திருமறைக் கலாமன்றம் வழங்கும் எஸ்தாக்கியார் (தென்மோடி நாட்டுக்கூத்து) ஆகியனவும் இடம்பெறவுள்ளன.

Related posts

*

*

Top